10 புனிதர்களின் திருப்பண்டங்கள் அடங்கிய பேழை திருகோணமலையில் மீட்பு..!

0
166

ஆசியாவில் முதன் முறையாக பத்து புனிதர்களின் உடற்பாகங்கள் உள்ள திருப்பண்டங்களை உள்ளடக்கிய புராதன பேழை ஒன்று திருகோணமலை புனித குவாடலூப்பே அன்னை ஆலயத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புனித குவாடலூப்பே அன்னை ஆலயத்தின் பங்கு குருமனையில் இருந்த இரும்பு பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்தே இவ் புனித பண்டங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என பங்கு குருவானவர் அருட்பணி எஸ்.ஆர்.ஜெயரட்ணம் தெரிவித்துள்ளார்.

வரலாற்று பதிவுகள்

கண்டெடுக்கப்பட்டுள்ள புனித பண்டங்கள் பத்தும் ஒரு ஆலயத்தில், ஒரே இடத்தில் கண்டறிப்பட்டுள்ளமையானது இலங்கையிலும் ஆசியா முழுவதிலும் இதுவே முதற் தடவை என அறியமுடிகின்றது.

ஒன்று அல்லது இரண்டு புனித பண்டங்கள் மட்டுமே ஆலயங்களில் இருப்பது சாதாரண நடைமுறை என்றும் ஆனால் இவ்வாறு பத்து புனித பண்டங்கள் ஒரு ஆலயத்தில் இருப்பது தாம் அறிந்தவரையில் இதுவே முதல் முறை எனவும் பங்கு குரு கூறியுள்ளார்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான ரோமின் வத்திகானிலிருந்து இவ் புனித பண்டங்கள் எந்த ஆண்டில் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறித்த வரலாற்று பதிவுகள் எதுவும் ஆலயத்தில் இல்லை எனவும் அறிய முடிகின்றது.

மெக்சிக்கோ நாட்டின் குவாடலூப்பே என்ற கிராமத்தில் புனித மரியாள காட்சி அளித்தமையை அடுத்து புனித குவாடலூப்பே அன்னை ஆலயம் திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.