குடியரசுக் கட்சிக்குள் விவேக் ராமசாமியின் ஆதரவு சரிவு: ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாகலாம்

0
132

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான குடியரசு கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் பணி அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது. ஜனவரி மாதம் லோவா மாநிலத்தில் முதல் வாக்குப்பதிவு நடைபெறும். ஆனால் லோவாவின் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

“தேர்தல் பிரசாரத்தின் போது தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் வழங்குவதில்லை என முடிவு செய்துள்ளோம். முழு விளம்பர செலவுகளையும் குறைக்கவில்லை.

பாரம்பரிய தொலைக்காட்சியை விட வித்தியாசமான வழிகளில் வாக்காளர்களிடம் செல்ல உள்ளோம். தொலைக்காட்சி விளம்பரங்களில் பணம் செலவழிப்பதால் பெரிய பலன் கிடைக்காது” என விவேக் ராமசாமியின் பிரசார முகாமையாளர் டிரிசியா மெக்லாலின் தெரிவித்துள்ளார்.

எனினும் தேர்தல் பிரசாரத்திற்காக 20 மில்லியன் டொலர்கள் செலவிட்டுள்ளதாக ராமசாமி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இவ்வளவு செலவு செய்தாலும் குடியரசுக் கட்சியினர் ராமசாமியிடம் லோவாவில் அதிக ஆர்வம் காட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ராமசாமிக்கு லோவாவில் குடியரசு கட்சி வாக்குகளில் 10 சதவீதம் கூட கிடைக்காது என கூறப்படுகிறது. அமெரிக்கா முழுவதும் விவேக் ராமசாமிக்கான ஆதரவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இதேவேளை குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுபவர்களில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் கட்சியினர் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளார். இதனால் அவர் மீண்டும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படலாம் என நம்பபடுகிறது.