வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம்: மீட்புப் பணியில் களமிறங்கிய மாரி செல்வராஜ்

0
100

இயக்குநர் மாரி செல்வராஜ் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் களமிறங்கியுள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களை இயக்கி பிரபலமான இயக்குநராக உருவெடுத்தவர் மாரி செல்வராஜ்.

அவரது சொந்த ஊர் நெல்லை அருகேயுள்ள புளியங்குளம் பகுதியில் தொடரும் கனமழை காரணமாக அமைச்சர் உதயநிதியுடன் இணைந்து மீட்புப் பணிகளில் களமிறங்கியுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் அப்பகுதியில் உள்ள நிலவரங்களையும் அடிக்கடி இணையத்தில் பகிர்ந்து வருகின்றது. களத்தில் இருக்கும் மாரி செல்வராஜ், “வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது.

கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஸ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது.

“ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர், பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர், குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை.

இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிகதுரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் “கருங்குளம் பஸ் ஸடாப் அருகே இரண்டு நாட்களாக சிக்கியிருந்தவர்கள் மீட்கபட்டு கொண்டிருக்கிறார்கள். இப்போது வரை பத்து பேர் மீட்கப்பட்டிருக்கிறார்கள். எல்லாரும் நிச்சயமாய் மீட்கப்படுவார்கள் உறவினர்கள் அச்சபடவேண்டாம்” எனவும் பதிவிட்டிருந்தார்.

மேலும், “கருங்குளம் பஸ் ஸ்டாப்பில் சிக்கியிருந்த 60க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். முத்தலாங்குறிச்சி மக்களும் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தின் வேகம் குறையாமல் இருப்பதால் அடுத்த கிராமங்களுக்குள் நுழைவது கடினமாக இருக்கிறது.

நன்றாக விடியும்வரை மக்கள் தைரியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவும் மீள்வோம்” என மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.