இலங்கையில் சிறையில் வாடும் மீனவர்களை மீட்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

0
124

இலங்கையில் சிறையில் வாடும் அனைத்து மீனவர்களையும் மீட்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மற்றும் புதுவை காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 25 மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை அவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

தனுஷ்கோடி அருகே ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகு மீது தங்களின் படகை மோதி சேதப்படுத்தி உள்ளது சிங்களக் கடற்படை.

இத்தாக்குதலில் சேதமடைந்த படகில் இருந்த 5 மீனவர்கள் உயிர் பிழைத்து உள்ளனர். சிங்களக் கடற்படையினரின் இத்தகைய செயல்கள் கண்டிக்கத்தக்கவை.

மிச்சாங் புயல் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடலுக்கு செல்லாத மீனவர்கள் கடந்த சில நாட்களாகத் தான் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அதற்குள்ளாகவே அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக்கடலில் பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது சட்டப்பூர்வ உரிமையாக்கப்பட வேண்டும். இது தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும்.

இப்போது கைது செய்யப்பட்ட 25 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் வாடும் அனைத்து மீனவர்களையும் இலங்கை அரசிடம் உள்ள அனைத்து படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.