சுற்றுலாத்துறை மூலம் 11 மாதங்களில் 1.8 பில்லியன் டொலர்கள் வருவாய்

0
133

இலங்கையின் சுற்றுலா வருமானம் இந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. ஜனவரி முதல் நவம்பர் இறுதி வரை சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்பட்ட வருமானம் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இது 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட வருமானத்தை காட்டிலும் 78.3 வீத அதிகரிப்பாகும் என இலங்கை மத்திய வங்கியின் (CBSL) தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டிய வருவாய் 205.3 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. இது 2022 இல் பெற்றுக்கொள்ளப்பட்ட வருவாயை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

2024ஆம் ஆண்டில் நாட்டிற்கு அதிக விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை நவம்பரில் மாத்திரம் 151,496 சர்வதேச சுற்றுலாப் பயணிகளை இலங்கை வரவேற்றுள்ளது. வருடத்தின் முதல் 11 மாதங்களில் இலங்கையின் ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.27 மில்லியனாக உள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுற்றுலா இலங்கையின் சிறந்த வெளிநாட்டு வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் ஒன்றாகும். நவம்பர் பிற்பகுதியில் சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான விசா கட்டணத்தை அரசாங்கம் வரவிருக்கும் பருவத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக தள்ளுபடி செய்தது.