விசா சேவையை இந்தியா மீண்டும் தொடங்கியது; கனடா வரவேற்பு

0
204

விசா சேவையை இந்தியா மீண்டும் தொடங்கியது வரவேற்கத்தக்கது”- கனடா விசா சேவையை இந்தியா மீண்டும் தொடங்கியது வரவேற்கத்தக்கது என கனடா தெரிவித்துள்ளது.

கனடாவைச் சேர்ந்தவர்கள் இந்தியா வருவதற்கான விசா சேவையை அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தது.

இந்நிலையில் கனடாவின் ஒட்டாவா, டொராண்டோ, வான்கோவர் நகரங்களில் விசா வழங்கும் சேவை இன்று முதல் தொடங்கும் என்று இந்திய தூதரகம் நேற்று அறிவித்தது.

குறிப்பாக நுழைவு விசா, தொழில் விசா, மருத்துவ விசா, மாநாட்டு விசா ஆகிய விசாக்கள் வழங்கப்படும் என்றும் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு வழங்கப்படும் சேவைகள் வழக்கம்போல் வழங்கப்புடும் என்றும் இந்திய தூதரகம் அறிவித்தது. இந்திய தூதரகத்தின் இந்த அறிவிப்புக்கு கனடா அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கனடாவின் குடியேற்றத் துறை அமைச்சர் மார்க் மில்லர், ”இது ஒரு நல்ல முன்னேற்றம். விசாவுக்காக பலர் தவித்துக்கொண்டிருந்தனர். இந்திய அரசு கடைப்பிடித்த, தற்காலிக விசா சேவை நிறுத்தம் ஏற்பட்டிருக்கக் கூடாது என்பதுதான் எங்களின் கருத்து. கனடாவில் உள்ள பல்வேறு சமூகங்களிடம், இது அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது” என கூறியுள்ளார்.

கனடாவின் அவசரகால தயார் நிலை அமைச்சரும், சீக்கியருமான ஹர்ஜித் சஜ்ஜன், ”விசா சேவை மீண்டும் தொடங்கி இருப்பது நல்ல செய்தி. ஆனால், இதன் மூலம் இந்தியா என்ன செய்தியை வழங்க முயன்றது என்பதை உறுதியாக அறிய முடியாது.

விசா சேவை ரத்து முடிவு எடுக்காமல் இருந்திருந்தால் அது இன்னும் நன்றாக இருந்திருக்கும். திருமணம், மரணம் போன்ற காரணங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையேயான பயணம் என்பது மிகவும் முக்கியமானது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலை வழக்கில் காவல்துறை விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கனடா தொடர்ந்து முன்வைக்கிறது” என தெரிவித்துள்ளார்.

கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் 18ஆம் திகதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேற ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டார். கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. இதற்கு எதிர்வினையாக இந்திய அரசு, இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதரக அதிகாரி வெளியேற உத்தரவிட்டது.

கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு இந்தியா கனடாவுக்கு கோரிக்கை விடுத்தது.

இந்தியாவில் இருக்கும் கனேடிய அதிகாரிகளை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேடு தேதிக்கு பின்னர் இந்தியாவில் இருக்கும் அவர்களின் தூதரகப் பொறுப்புகள் நீக்கப்படும் என்றும் இந்தியா கூறியிருந்தது. இதனால் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.