யூத சமூக தலங்களில் பாதுகாப்பை பலப்படுத்திய பிரான்ஸ்

0
158

பாலஸ்தீனிய ஹமாஸ் எதிர்ப்பு குழு மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான மோதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பிரான்ஸின் பல பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி பாரிஸ் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வழிபாட்டுத்தலங்கள், யூதப் பாடசாலைகள் மற்றும் நினைவுச்சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளைச்சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ், மார்சேய், ஸ்ட்ராஸ்பேர்க் மற்றும் லியோன் ஆகிய இடங்களில் செப்டெம்பர் மாதம் நடுப்பகுதியில் இருந்து ஆரம்பமாகும் விடுமுறை மற்றும் யூத புதுவருட ஆரம்பம் காரணமாக வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு ஏற்கனவே பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் Gerald Darmanin இன் உத்தரவுக்கு அமைய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் பிரான்ஸில் உள்ள யூத சமூகத்தின் தளங்களின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்துமாறு பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சுமார் 10 ஆயிரம் இராணுவத்தினர் மற்றும் 4700 பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை எவ்வித அச்சுறுத்தல்களும் ஏற்படவில்லை எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.