சிரேஷ்ட பத்திரிகை கலைஞர் எட்மண்ட் ரணசிங்கவிற்கு ஜனாதிபதி தலைமையில் விருது வழங்கல் நிகழ்வு

0
182

நாட்டின் சிரேஷ்ட பத்திரிகை கலைஞரான “திவயின” பத்திரிகை ஆசிரியர் பீடத்தின் முதலாவது இணை ஆசிரியரும் பணிப்பாளருமான எட்மண்ட் ரணசிங்வை கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாளை (03) மாலை 3.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய முன்னெடுக்கப்பட்டு வரும் இந்நாட்டின் பத்திரிகை துறையில் விலைமதிப்பற்ற பணிகளை மேற்கொண்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர்களை கௌரவிப்பதற்கான ஆரம்ப நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனது வாழ்வில் 93 ஆவது வயதை எட்டியிருக்கும் ரணசிங்கவின் ஏழு தசாப்த ஊடக பணியை பாராட்டும் வகையில் எழுதப்பட்ட எட்மண்ட் பத்திரிகைப் புரட்சி (“எட்மண்ட் பத்தர விப்லவய”) எனும் நூல் வெளியீட்டு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஆரம்ப உரை திவயின மற்றும் ரிவிர பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியரான அமெரிக்காவில் வசிக்கும் உபாலி தென்னகோன் நிகழ்த்தவுள்ளார்.

1952 இல் லேக்ஹவுஸ் நிறுவனத்தில் ‘டெயிலிநியுஸ்’ பத்திரிகையின் ஊடகவியலாளராக ஊடக வாழ்க்கையை ஆரம்பித்த எட்மண்ட ரணசிங்க, தினமின பத்திரிகையின் பிரதிப் பணிப்பாளராக பணியாற்றிய 1973 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஹேக் ஹவுஸ் நிறுவனம் அரசுடமையாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகினார்.

1977 ஆம் ஆண்டுகளில் மீண்டும் லேக் ஹவுஸின் வேண்டுகோளுக்கிணங்க ‘தினமின’ பத்திரிகையின் ஆசிரியராக பதவியேற்ற ரணசிங்க பின்னர் சிலுமின பத்திரிகையின் ஆசிரியராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

1981 ஆம் ஆண்டில் ‘திவயின’ பத்திரிகையின் இணை ஆசிரியராக தெரிவாகிய ரணசிங்க குறுகிய காலத்தில் இந்நாட்டின் பத்திரிகை துறையை புதிய பாதைக்கு இட்டுச் சென்று பிரசித்தப்படுத்தினார். அதன் முதலாவது ஆசிரியர் பீட பணிப்பாளரான ரணசிங்க, தனது 86 ஆவது வயதில் 2016 ஆண்டில் மீண்டும் ‘சிலுமின’ ஆசிரியர் பதவிக்கு தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.