தேகம் மறைந்தாலும் இசையாய் மலரும் பாடும் நிலா பாலுவின் 3ம் ஆண்டு நினைவு நாள்!

0
223

இசை ஜாம்பவான் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் 3வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடும் நிலா என்று அழைக்கப்படும் எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு கொரொனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த மண்ணுலகில் இவர் இல்லை என்றாலும், தினமும் ஒலிக்கும் இவரது பாடல்கள் மூலம் ஒவ்வொரு ரசிகர்கள் மனதிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இவரை பற்றிய ருசிகர தகவல்களை இன்று மீட்டுப் பார்க்கலாம்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் திருவள்ளூர் மாவட்டம், கோனேட்டம்பேட்டையில் எஸ்.பி.சாம்பமூர்த்தி மற்றும் சகுந்தலாம்மா தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.

அவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் உள்ளனர். பாடகி எஸ்.பி சைலஜா, எஸ்.பிபாலசுப்ரமணியத்தின் உடன் பிறந்த சகோதரியாவார்.

பாலசுப்ரமணியம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் பிற மொழிகளில் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

பாடுவதைத் தவிர எஸ்.பி.பாலசுப்ரமணியம் சுமார் 48 தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடிகராக கடைசியாக நடித்த படம் ஸ்ரீராம் ஆதித்யாவின் தேவதாஸ் (2018).

எஸ்.பி.பாலசுப்ரமணியம் டப்பிங் கலைஞராக சிறிது காலம் பணியாற்றியிருக்கிறார். தெனாலியின் (2000) தெலுங்குப் பதிப்பில் கமல்ஹாசனுக்கு டப்பிங் பேசியிருக்கிறார்.

தி நியூஸ் மினிட் செய்தியில் எஸ்பி பாலசுப்ரமணியம் 12 மணி நேரத்தில் இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக 21 கன்னட பாடல்களை பதிவு செய்துள்ளார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆறு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இது தவிர தமிழ்நாடு மாநில விருது மற்றும் கர்நாடக மாநில விருது போன்றவற்றையும் வென்றுள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் பத்மஸ்ரீ (2001) மற்றும் பத்ம பூஷன் (2011) ஆகிய விருதுகளையும் பெற்றவர்.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்த ஆண்டின் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமைக்கான நூற்றாண்டு விருது எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு வழங்கப்பட்டது.

 Remembering The Legendary SP Balasubramaniam

எஸ்.பி.பாலசுப்ரமணியம் சுவாரஸ்யமாக தான் பொறியியல் படித்த அனந்தபுரமு ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாகார்ஜுனா, சிரஞ்சீவி போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கு 5 தசாப்தங்களுக்கும் மேலாக திரையுலக வாழ்க்கையில் குரல் கொடுத்தவர் என்கிற பெருமைக்குரிய ஒரே மனிதர் எஸ்பி பாலசுப்ரமணியம்.

எஸ்.பி.பி எப்போதுமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக அறிமுக பாடலை பாடுபவர். இவருடைய கடைசி பாடலும் அண்ணாத்த படத்தில் ரஜினிக்காக ‘அண்ணாத்த… அண்ணாத்த…’ என்கிற பாடலாகவே அமைந்தது.

கடந்த 2020 ஆம் ஆண்டு இதே நாள் ரசிகர்கள் மனதை ரணமாக்கிவிட்டு சென்ற எஸ்.பி.பிக்கு இன்று பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர் உடலால் மறைந்திருந்தாலும் இசையால் எம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்.