கொலம்பியா மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த பாதாள உலக தலைவரின் உடலை திருடிச் சென்ற கும்பல்

0
238

கொலம்பியாவில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பாதாள உலகக் கும்பல் தலைவரின் சடலம் அந்த இடத்திலிருந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜூனியர் ரோல்டனின் மரணத்திற்குப் பிறகு அவரது உடலை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை. எனவே அவரை என்விகாடோவில் உள்ள ஒரு புதைகுழியில் அடக்கம் செய்ய முடிவுசெய்யப்பட்டது.

ஈக்வடாரை அச்சுறுத்திய பாதாள உலகக் கும்பலான லாஸ் சோனெரோஸின் உயர் பதவியில் இருந்த ரோல்டன், மே மாதம் கொலம்பியாவின் ஆண்டியோகுயா மாகாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் தனது சொந்த நாடான ஈக்வடாரில் உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக கொலம்பியாவுக்கு தப்பிச் சென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்பிறகு, அவரது உடல் வனப்பகுதியில் தலையில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.

பாதாள உலகக் கும்பலின் தலைவனான ரோல்டன் தலைமறைவாகி எடுத்துச் சென்ற பெருந்தொகைப் பணத்தைத் திருட நினைத்த அவரது மெய்ப்பாதுகாவலரால் ரொல்டன் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஆனால் கொலைச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. உடலில் பச்சை குத்தப்பட்ட அடையாளங்களிலிருந்து ரோல்டன் அடையாளம் காணப்பட்டார்.

மே 18 அன்று மெடலின் தெற்கே உள்ள கல்லறையில் உள்ள அவரது உடலை புதைக்க பொலிஸார் ஏற்பாடு செய்திருந்தனர்.

கடந்த செவ்வாய்கிழமை அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மயானத்தின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அறையில் தேடிய போது அதில் ஒரு அறை காலியாக இருப்பதை அவதானித்துள்ளனர்.

இரவோடு இரவாக ஒரு குழுவினர் மயானத்திற்கு வந்து ரோல்டனின் சடலத்தை எடுத்துச் சென்றதாக பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இது பாதாள கும்பல் தலைவரின் உடலை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலா அல்லது சடலத்தை திருடியதன் நோக்கம் என்ன என்பது இதுவரையில் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.