கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி; துப்பாக்கி ரவை உள்ளிட்ட தடய பொருட்கள் மீட்பு!

0
181

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வானது இரண்டாவது நாளாக இன்றைய தினம் காலை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த மனித புதைகுழி அகழ்வுப் பணியானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ், யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவையாளர், தடயவியல் பொலிஸார், விஷேட அதிரடி படையினர் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“இந்த அகழ்வு பணியின் போது ஒரு சில மேலதிக மனித எலும்புக்கூடுகள் இனங்காணப்பட்டுள்ளது. தொடர்ந்து அகழ்வு பணி நாளை முன்னெடுக்கப்பட உள்ளது.

வேறு தடயப் பொருட்களும் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிசன்னங்கள் என சந்தேகிக்கப்படும் ஒரு சில உலோகத் துண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் சில ஆதார சான்று பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. அவை தொடர்பான ஆராய்வு மேற்கொள்ளப்பட்டு அறிய தரப்படும்” என அவர் தெரிவித்திருந்தார்.

பகுதியளவிலே இன்று மனித எச்சகங்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.