மட்டக்களப்பில் 176 இளைஞர்கள் படுகொலை; 33 ஆவது வருட நினைவேந்தல்

0
222

33 வருடங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 176 கிழக்கு தமிழ் இளைஞர்களை நினைவுகூறும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இந்த நினைவேந்தலின் போது, 33 வருடங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 176 கிழக்கு தமிழ் இளைஞர்களுக்கு நீதி கிடைக்க சர்வதேசம் தலையீடு செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நீதியை பெற்றுக்கொடுக்கும் என்பதில் சந்தேகம் நேர்வதாகவும் நினைவேந்தலில் கலந்துக்கொண்டவர்கள் தெரிவித்தனர்.

போரினால் இடம்பெயர்ந்து தஞ்சமடைந்திருந்த குறித்த 176 இளைஞர்களும் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டதை விசாரணை ஆணைக்குழு கண்டறிந்துள்ளதாக மட்டக்களப்பு சர்வமதச் சங்கத்தைச் சேர்ந்த கந்தையா ஜெகதாஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதேவேளை,குறித்த இளைஞர்கள் 1990 செப்டம்பர் 5 ஆம் திகதியன்று கொம்மாத்துரை முகாமில் இருந்து இராணுவத்தினரால் இரண்டு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர். அதேபோல் அன்றைய தினம் மட்டக்களப்பிலிருந்து பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட பல மக்கள் உட்பட பலர் இன்றுவரையில் திரும்பி வரவில்லை எனவும் தெரிவித்தார்.