கட்டுமானப் பணிக்காக சீனப் பெருஞ்சுவரை இடித்த இருவர்!

0
254

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான ‘சீனப் பெருஞ்சுவர்’ நாட்டின் சுவராக மட்டுமின்றி உலக அளவில் அவர்களுக்கு முதல் அங்கீகாரத்தை வழங்கிய வரலாற்றுக் கட்டடமாகவும் திகழ்கிறது.

இந்தச் சுவரில் உருவான சிறிய வழிப்பாதை வாகன போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததால் இரண்டு பேர் அதனை அகலப்படுத்தியுள்ளனர்.

சீனாவின் வடக்கு ஷாக்ஸி மாகாணத்தில் யூ கவுண்டிக்கு அருகில் உள்ள யாங்கியான்ஹே பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிரதேசத்திற்கு அருகில் 38 வயது ஆணும் 55 வயது பெண்ணும் நிர்மாணப்பணிக்கான ஒப்பந்தம் ஒன்றை பெற்றுள்ளனர்.

Demolished the Great Wall of China

Demolished the Great Wall of China

நிர்மாண பகுதிக்கு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் வாகன போக்குவரத்திற்கும் பெரும் சுவர் தடையாக இருந்துள்ளது. இதனால் இருவரும் இயந்திரங்கள் மூலம் பெருஞ்சுவரை இடித்து வழியை பெரிதாக்கியுள்ளனர்.

பிரதேசவாசிகள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதுடன் இடிக்கப்பட்ட சுவரைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சந்தேக நபர்கள் தமது பணி இடத்திற்கு குறுக்குவழியாகச் செல்வதற்காக சீனாவின் கௌரவத்தின் அடையாளமான பெரிய சுவருக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

Great Wall of China

இதனையடுத்து பொலிஸார் இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சீனப் பெருஞ்சுவரின் நிர்மாணிப்பு பணிகள் கி.மு.200 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் தற்போதைய பெரும்சுவர் மிங் என்ற அரச வம்சத்தால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் நிர்மாணிப்பு பணிகள் கி.பி.1368 ஆம் ஆண்டு முதல் 1644 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் நடந்ததாக வரலாறு கூறுகிறது.

உலகின் மிகப்பெரிய இராணுவ பாதுகாப்பு அரண் கட்டமைப்பான இந்தச் சுவரை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரித்துள்ளது. இந்த வரலாற்றுக் கட்டிடத்தைக் காண உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் சீனாவுக்கு செல்கின்றனர்.