சேனல் 4 வெளியிட்ட காணொளி தொடர்பில் சர்வதேச விசாரணை கோரும் கர்தினால்

0
227

பிரித்தானியாவின் செனல் 4 அலைவரிசையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசேட அறிக்கையின் உண்மைகள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைக் குழுவொன்று விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தயாராக உள்ள போதிலும், அந்த குழுவின் ஊடாக இந்த விசாரணைகள் பக்கச்சார்பற்ற மற்றும் நேர்மையான முறையில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச புலனாய்வுக் குழுவிற்கு ஆதரவாக நியமிக்கப்படும் உள்ளூர் விசாரணைக் குழுவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டவர்கள் மற்றும் தற்போது வெவ்வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டவர்கள் யார் என்பதும் உள்ளடக்கப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சர்ச்சைக்குரிய காணொளியை பிரித்தானியாவின் செனல் 4 நேற்று இரவு (05) வெளியிட்டது.

ஏறக்குறைய 50 நிமிடங்கள் கொண்ட காணொளியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆட்சி மாற்றத்திற்காக திட்டமிடப்பட்டது என்று கூற முயற்சிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையான் எனப்படும் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசந்துரை சந்திரகாந்தன் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் குழுவின் பேச்சாளராக இருந்த ஆசாத் மௌலானா இந்த காணொளியில் தோன்றி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ஆசாத் மௌலானா தற்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் அறிக்கையொன்றும் சென்ல 4 வெளியிட்டுள்ள காணொளியில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.