யாழில் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்படவுள்ள 2900 ஏக்கர் காணி

0
177

கடந்த 2013 ஆம் ஆண்டு அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் 2 ஆயிரத்து 900 ஏக்கர் காணிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் விடுவிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளரிகளிடம் கையளிக்கப்படும் என மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அந்த காணிகளை பார்வையிட பிரதேசத்திற்கு சென்றிருந்த அமைச்சர் காணி உரிமைகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.

மிக விரைவில் காணிகளை அளவிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் பெரும்பாலும் அது அடுத்த வாரத்திற்குள் நடைபெறும் எனவும் அமைச்சர் இதன் போது கூறியுள்ளார்.

Minister Douglas Devananda

போர் நடைபெற்ற காலத்தில் பாதுகாப்பு தரப்பினர் முகாமைகளை அமைப்பதற்காக அதிகளவான காணிகளை கைப்பற்றினர்.

இதன் பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு கைப்பற்றிய காணிகளை விடுவிப்பது சம்பந்தமாக அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது.

அதில் குறிப்பிடப்பட்டிருந்த காணிகளில் சுமார் 6 ஆயிரத்து 400 ஏக்கர் காணிகள் யாழ்ப்பாண மக்களுக்கு மீண்டும் கையளிக்கப்பட்டன.

மீள கையளிக்கப்பட்ட காணிகளில் 80 வீதமான உரிமையாளர்கள் மீள குடியேறியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.