வடக்கில் உள்ள பௌத்த விகாரைகள் தமிழர்களுடையது! ரணிலின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு

0
234

தொல்பொருள் திணைக்களத்தினால் தமிழர் பகுதி காணிகள் கடந்த காலங்களில் பலவந்தமாக கையப்படுத்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தமது நிலங்களை மீட்க போராடி வந்தனர்.

இந்நிலையில் வடக்கு, கிழக்கில் தொல்பொருள் திணைக்களம் ஏதேச்சையான முறையில் தமிழ் மக்களின் வாழ்வாதார காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் காணப்படும் 229 ஏக்கர் காணியை விடுப்பதற்கான கடிதத்தை ஜூன் 31 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்திருந்தார்.

எனினும் இதுவரையில் அதற்கான பதில் வழங்கப்படாத நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி முன்னிலையில் விளக்கம் கோரியிருந்தனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிப்பதற்கு தடுமாறியதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளனர்.

காணி பிரச்சினை குறித்து ஜனாதிபதி தீவிரமாக கலந்தாலோசித்துள்ளதுடன் வடக்கிலுள்ள பௌத்த விகாரைகள் தமிழர்களுடையது எனவும் பதிலளித்திருந்தார்.

ஜனாதிபதியின் இந்த கருத்துக்கு தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கடும் விமர்சனத்தையும் முன்வைத்துள்ளனர்.

கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.