தொடர்ந்தும் ஏமாற முடியாது! முடிவெடுக்கும் கட்டத்தில் இருக்கிறோம் – ரணிலிடம் தமிழரசுக் கட்சி தெரிவிப்பு

0
246

நாங்கள் தொடர்ந்தும் உங்களால் ஏமாற்றப்படுகின்றோம். இனியும் நாம் ஏமாந்து கொண்டிருக்க முடியாது. முடிவெடுக்கும் காலகட்டத்துக்குள் நாம் வந்துவிட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இலங்கை தமிழரசுக் கட்சி நேரில் எடுத்துரைத்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனின் கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு நேற்று (08.06.2023) மாலை இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பிற்கு ரெலோ மற்றும் புளொட் அமைப்புக்கு ஜனாதிபதி செயலகத்தால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் பங்கேற்கவில்லை என தெரியவருகிறது.

இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன், இரா. சாணக்கியன் ஆகியோர் பங்கேற்றனர்.

தீர்வு தொடர்பான நிலைப்பாடு

தொடர்ந்தும் ஏமாற முடியாது! முடிவெடுக்கும் காலத்திலிருக்கிறோம் - ரணிலிடம் தமிழரசுக் கட்சி தெரிவிப்பு | Tamilarasu Party Meeting With Ranil

சந்திப்பு தொடர்பில் இரா. சம்பந்தன் கூறுகையில், “ஜனாதிபதியுடனான பேச்சின் போது அரசியல் தீர்வு தொடர்பான எமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறினோம். தீர்வு தொடர்பான அவரது போக்கு சரியாகத் தென்படவில்லை. அரசமைப்பு சீர்திருத்தத்தைப் பற்றி மாத்திரம் அவர் சிந்திக்கின்றார்.

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று அவரிடம் கூறியுள்ளோம். தீர்வு தொடர்பில் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென எடுத்துரைத்தோம்.

அரசியல் தீர்வை விரைந்து காண வேண்டும். இல்லையேல் தீர்க்கமான முடிவை நாம் விரைவில் எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, அரசாங்கத்துடன் பலமுறை பேச்சு நடத்தியுள்ளதாகவும் அரசாங்கம் பல கால எல்லைகளை குறிப்பிட்டுள்ளதாகவும் ஆனால் எதுவும் நடக்கவில்லை என்றும் தமிழரசுக் கட்சியினர் நேற்றைய பேச்சில் குறிப்பிட்டுள்ளனர். 

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வில்லை, நாடு எதிர்கொள்ளும் தேர்தல்களும் இல்லையெனச் சுட்டிக்காட்டி இதே நிலை நீடித்தால் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லாமல் போய்விடும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

நிரந்தர தீர்வு

தொடர்ந்தும் ஏமாற முடியாது! முடிவெடுக்கும் காலத்திலிருக்கிறோம் - ரணிலிடம் தமிழரசுக் கட்சி தெரிவிப்பு | Tamilarasu Party Meeting With Ranil

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை பலமுறை ஜனாதிபதியிடம் தெரிவித்தாயிற்று, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நிரந்தர தீர்வு மிகக் குறுகிய காலத்துக்குள் – அடுத்த சில மாதங்களுக்குள் முன்வைக்கப்பட வேண்டும்.

அரசாங்கம் அதைச் செயற்படுத்தத் தவறினால், தமிழ் மக்களுக்குள்ள வெளியக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், அதற்கான நடவடிக்கைகளில் இறங்குவோம் என்று இரா.சம்பந்தன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். 

மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சி சபைத் தேர்தலை இப்போதைக்கு நடத்தும் யோசனை தனக்கில்லையென தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்குப் பதிலாக வடக்கு – கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் இடைக்கால சபையொன்றை அமைப்பதே தனது திட்டம் என கூறியுள்ளார். 

தெளிவான பதிலை வழங்காத ஜனாதிபதி

வடக்கு – கிழக்கு இணைந்த நிர்வாக சபையா அல்லது இரண்டு மாகாணங்களுக்கும் தனித்தனியான நிர்வாக சபைகளா என தமிழரசுக் கட்சியினர் கேட்டனர். அது பற்றிய தெளிவான பதிலை ஜனாதிபதி வழங்கவில்லை.

அப்படியான யோசனை உள்ளதாகவும், அது பற்றி தமிழரசுக் கட்சியுடனும், ஏனைய தமிழ்க் கட்சிகளுடனும் கலந்து பேசிச் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன் அரசியல், காணி உள்ளிட்ட பிரச்சினைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழுக்கள் அமைத்துள்ளதாகவும் அந்த அறிக்கைகளை தமிழ்க் கட்சிகளிடம் கையளித்து பேச்சு நடத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

தொடர்ந்தும் ஏமாற முடியாது! முடிவெடுக்கும் காலத்திலிருக்கிறோம் - ரணிலிடம் தமிழரசுக் கட்சி தெரிவிப்பு | Tamilarasu Party Meeting With Ranil

இரண்டு மாதங்களில் அறிக்கை கிடைத்து விடும் என்றும், விரைவில் தனது நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜூலை மாதம் மீண்டும் பேச்சு நடத்தலாம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இதேவேளை, இந்த சந்திப்பின் போது மகாவலி ஜே, எல் வலயங்கள் பற்றி ஜனாதிபதியுடன் பேசியதாகவும், அவற்றை உடன் நிறுத்த நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி உத்தரவாதமளித்ததாகவும் தமிழரசுக் கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும் எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சி அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் கூடி ஆராயவுள்ளதாக தெரியவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.