ராஜபக்ஷ முகாமினர் இலங்கையில் ஆட்சியை அமைக்க முடியாது! அநுரகுமார

0
360

நாட்டை பல தசாப்தங்களாக ஆட்சி செய்து கொண்டிருந்த ராஜபக்ஷாக்கள் இன்று காணாமல் போயுள்ளனர். மீண்டுமொரு ராஜபக்ஷ முகாம் நாட்டில் ஆட்சியமைக்க முடியாதளவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சிதறிப்போயுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மஹரகமவில் நடைபெற்ற மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த காலங்களில் அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகளைக் கண்காணிப்பதற்கு ஜே.வி.பி.யிலிருந்து ஓரிருவரை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்தால் போதும் என்று மக்கள் எண்ணினர்.

ஆனால் இன்று ஆட்சியை ஜே.வி.பி.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதனைக் கூறும் மக்கள் நினைத்தால் எம்மால் தேர்தலில் வெற்றி பெற முடியும். 74 ஆண்டுகளாக நாட்டில் காணப்படும் அரசியல் சூதியை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.

எனவே தான் ஜே.வி.பி.யிடம் ஆட்சியைக் கையளித்துப் பார்ப்போம் என்று கூறுகின்றனர். கடந்த பல தசாப்தங்களாக அரசியலில் பிரதான முகாமாகக் காணப்பட்டது ராஜபக்ஷ குடும்பமாகும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாகவும், பொதுஜன பெரமுனவாகவும் ராஜபக்ஷ குடும்பமே மாறி மாறி ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்த கட்சிகள் வேலைத்திட்டங்களின் அடிப்படையிலும் , கொள்கைகளில் அடிப்படையிலும் உருவாக்கப்படவில்லை. மாறாக தலைவர்களை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. அதற்கமையவே சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ என அவர்களைச் சுற்றியே கட்சி காணப்பட்டது.

ராஜபக்ஷக்களின் முகாம் சிதறிவிட்டது; அநுர! | The Camp Of The Rajapaksas Was Scattered Anura

மஹிந்த , கோட்டா மற்றும் பஷில் ஆகிய மூவரைச் சுற்றியே ராஜபக்ஷ முகாம் காணப்பட்டது. ஆனால் இன்று கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வீதியில் இறங்க முடியாது. மஹிந்த ராஜபக்ஷ வீதியில் இறங்கினாலும் அவரால் நடக்க முடியாது. பஷில் ராஜபக்ஷ நாட்டிலேயே இல்லை. தற்போது முழு ராஜபக்ஷ முகாமும் சிதறிப்போயுள்ளது.

நாடாளுமன்றத்தில் ராஜபக்ஷ முகாமைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியஸ்தர் ஒருவருடன் உரையாடும் போது , ‘கட்சி பிளவடைந்துள்ளதைப் போன்றுள்ளதல்லவா?’ என்று கேட்ட போது , ‘கட்சி பிளவடையவில்லை. மாறாக தூக்கி தரையில் எரிந்ததைப் போன்று துகள்களாக சிதறியுள்ளன.’ என்று அவர் கூறினார்.

மீண்டுமொரு முறை இலங்கையில் ராஜபக்ஷ முகாமினர் ஆட்சியை அமைக்க முடியாதளவிற்கு ராஜபக்ஷ முகாம் சிதறிக்கப்பட்டுள்ளது என தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.