ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை தாக்கல்!

0
461

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வந்த ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம், தனது அறிக்கையை நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 05.12.2016 அன்று காலமானார். அவரது மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையம் 30.09.2017 அன்று விசாரணையைத் தொடங்கியது.

இந்த ஆணையம் 151 பேரிடம் விசாரணை நடத்தி இறுதி அறிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கை ஆங்கிலத்தில் 500 பக்கங்களும், தமிழில் 608 பக்கங்களும் கொண்டது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அதில், ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவரது மரணம் வரையில் நடைபெற்ற நிகழ்வுகளையும், சம்பந்தப்பட்டவர்களையும் விசாரித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அனுமதி கொடுத்தும் செய்யாதது ஏன்?, வெளிநாட்டுக்கு அவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லலாம் என மருத்துவர்கள் கூறிய நிலையில் கடைசிவரையில் அது நடக்காமல் போனது ஏன்? என பல்வேறு கேள்விகளை ஆணையம் எழுப்பியிருக்கிறது.

இறுதியில், இதுதொடர்பாக ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சிகிச்சை அளித்த மருத்துவர் சிவகுமார், அன்றைய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அன்றைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது விசாரணை நடத்தவும் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

Arumugasamy Commission report on the jeyalalitha death case released