“அம்மா என் சாக்லேட் எல்லாம் சாப்பிடுறா.. அவரை ஜெயில்ல போடுங்க.. புகார் கொடுத்த 3 வயது பையன்.. வைரல்வீடியோ..!

0
518

மத்திய பிரதேச மாநிலத்தில் 3 வயது சிறுவன் ஒருவன் தனது அம்மா மீதே காவல்துறையில் புகார் அளிக்க சென்ற வீடிய சமூக வலை தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்போர் மாவட்டத்தில் உள்ள தெத்தலை எனும் கிராமத்தில் தான் இந்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இங்குள்ள காவல் நிலையத்திற்கு இன்று ஒருவர் தனது மகனுடன் வந்திருக்கிறார். 3 வயதான அந்த சிறுவன் தனது அம்மாவை பற்றி புகார் அளிக்க வந்திருப்பதாக சொல்ல காவல் நிலையத்தில் இருந்த அதிகாரிகளே ஆடிப்போய்விட்டனர்.

அந்த சிறுவனின் தந்தை அதிகாரிகளிடம் பேசுகையில்,”வீட்டில் அவனது அம்மா அவனை குளிப்பாட்டி கண்ணிற்கு மை இட்டுக்கொண்டிருந்த போது, சாக்லேட் கேட்டு அவரை தொந்தரவு செய்தான். இதனால் அவனது கன்னத்தில் செல்லமாக எனது மனைவி தட்டினாள். உடனே கோபப்பட்டுக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் போகவேண்டும் என என்னை அழைத்தான். நானும் வேறுவழியின்றி அழைத்துவந்தேன்” என சொல்லியிருக்கிறார்.

இதனையடுத்து அந்த காவல் நிலையத்தில் இருந்த அதிகாரி ஒருவர் சிறுவனிடம் புகாரை பெறுவதாக கூறி என்ன நடந்தது என கேட்டிருக்கிறார். அப்போது மழலை மொழியில் பேசிய சிறுவன்,”என்னுடைய சாக்லேட்களை எல்லாம் எனது அம்மா எடுத்துக்கொள்கிறார். அவரை ஜெயில்ல போடுங்க” என கூற, இதைக்கேட்டு மொத்த ஸ்டேஷனும் சிரித்திருக்கிறது.

Kid Complains about his mom to the police over chocolate theft

அதைத் தொடர்ந்து தனது தந்தை மற்றும் தாய் பேரை அதிகாரிகள் கேட்க, யோசித்தபடியே  அந்த சிறுவன் சொல்லியிருக்கிறான். மேலும், புகாரில் கையெழுத்து போடவேண்டும் என அதிகாரி சொல்லவே, விளையாட்டுத்தனமாய் பேப்பரில் எதையோ எழுத அதை பார்த்த அனைவர்க்கும் சிரிப்பு வந்துவிட்டது. இதனையடுத்து அந்த காவல்நிலையத்தின் அதிகாரி அந்த சிறுவனிடம் ஆலோசனை கூறியுள்ளார். அப்போது, நல்ல எண்ணத்திற்காகவே அம்மா சில நேரங்களில் அவ்வாறு செய்வார் எனவும், அப்போது சினம் கொள்ளாமல் அம்மாவின் சொல்படி நடக்கவேண்டும் எனவும் சொல்லியிருக்கிறார். அதனை சமர்த்து பிள்ளையாக கேட்டுக்கொண்டு அங்கிருந்து சென்றிருக்கிறான் அந்த சிறுவன்.

இதனிடையே இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் இந்த கியூட் வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.