இங்கிலாந்தில் 700 கோடி ரூபாய் மதிப்புள்ள ஓவியத்தின் மீது தக்காளி சூப்பை வீசிய போராட்டக்காரர்கள்!

0
339

உலகின் புகழ்பெற்ற ஓவியரான வான்காவின் படைப்பின் மீது இரு போராட்டக்காரர்கள் தக்காளி சூப்பை வீசிய சம்பவம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த கோரி படிம எரிபொருட்களை எடுக்க அரசு தடைவிதிக்க வேண்டும் என மக்கள் குழு போராடி வருகிறது. Just Stop Oil எனும் அமைப்பை சேர்ந்த போராட்ட குழுவினர் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு வகைகளில் போராடி வருகின்றனர்.

Oil protestors throw soup at Van Gogh Sunflowers painting

அந்த வகையில், லண்டனில் உள்ள நேஷனல் கேலரியில் வைக்கப்பட்டிருந்த புகழ்பெற்ற ஓவியரான வான்கா வரைந்த ஓவியத்தின் மீது தக்காளி சூப்பை ஊற்றியிருக்கிறார்கள் இரண்டு பெண்கள். இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். Just Stop Oil எனும் வாசகம் அச்சடிக்கப்பட்ட டிஷர்ட்களை அணிந்திருந்த பெண்கள் காலநிலை மாற்றம் குறித்தும் அப்போது பேசியுள்ளனர். இருப்பினும், கண்ணாடி கவசத்தால் ஓவியம் பாதுகாக்கப்பட்டுள்ளதால் ஓவியம் இந்த தாக்குதலில் பாதிப்படையவில்லை.

வான்கா

வட மேற்கு ஐரோப்பிய நாடான நெதர்லாந்தை சேர்ந்தவர் வின்சென்ட் வான்கா. 1853 ஆம் ஆண்டு பிறந்த இவர் உலக அளவில் மிகச்சிறந்த ஓவியர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். 37 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவர் 2000 த்திற்கும் மேற்பட்ட ஓவியங்களை தீட்டியுள்ளார்.

இவர் தன்னுடைய வாழ்வின் இறுதி ஆண்டுகளில் வரைந்த Sunflowers எனும் படைப்பு உலக அளவில் பிரசித்தி பெற்றது. இந்த ஓவியம் தற்போது லண்டனில் உள்ள நேஷனல் கேலரியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதன் மதிப்பு 84 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 691 கோடி ரூபாய்) என நம்பப்படுகிறது.

இந்நிலையில், இந்த அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த Just Stop Oil அமைப்பை சேர்ந்த இரு பெண்கள் இந்த ஓவியத்தின் மீது தக்காளி சூப்பை ஊற்றியிருக்கின்றனர். இதனிடையே இதுகுறித்து பேசிய அருங்காட்சியக அதிகாரிகள், “இன்று காலை 11 மணியளவில் நேஷனல் கேலரியில் உள்ள 43 ஆம் அறைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், வான்காவின் சன்பிளவர் ஓவியத்தின் மீது சிவப்பு நிற திரவத்தை ஊற்றினர். அது தக்காளி சூப் என சந்தேகிக்கிறோம். இருப்பினும், ஓவியத்தின் பிரேமில் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஓவியம் சேதமடையவில்லை” என்றனர்.