“விண்வெளில மாட்டிகிட்டேன் வந்த உடனே கல்யாணம்”… உலக உருண்டை சைஸில் உருட்டல்… 65 வயது காதலியை ஏமாற்றிய இளைஞர்!

0
2259

ஜப்பானை சேர்ந்த பெண் ஒருவர் காவல்துறையில் கொடுத்த புகார் அந்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் தொழில்நுட்ப வசதிகள் மனித குலத்திற்கு பல கொடைகளை அளித்திருக்கின்றன. ஒருகாலத்தில் இதெல்லாம் நடக்குமா? என மக்கள் சிந்தித்த பல விஷயங்களை இன்று விரல் நுனியில் நம்மால் செய்துமுடிக்க முடிகிறது. இதற்கு இணையமும் தகவல் தொழில்நுட்ப வசதிகளும் முக்கியமான காரணம். ஆனால், இதை பயன்படுத்தி சிலர் தவறான காரியங்களில் ஈடுபட்டு வருவதையும் நாம் அவ்வப்போது பார்த்துக்கொண்டு தான் வருகிறோம்.

ஒருவருடைய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் உள்ள தகவல்களை அறிந்து கொள்ளையடிக்கும் கும்பலை பார்த்திருப்போம். காதலிப்பதாகக்கூறி காசு பறிக்கும் ஆசாமிகள் பற்றியும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஜப்பானை சேர்ந்த 65 வயது பெண்மணி ஒருவர் மிகவும் வித்தியாசமான முறையில் பணத்தினை இழந்திருக்கிறார்.

Woman scammed by fake astronaut for Rs 24 lakh

இன்ஸ்டா காதல்

ஜப்பானை சேர்ந்த பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் மூலமாக ஒருவரை சந்தித்திருக்கிறார். ஆரம்பத்தில் நட்பாக பழக துவங்கிய இருவரும் விரைவில் காதலர்களாக மாறியுள்ளனர். அப்போது, அந்த ஆண் தன்னைப்பற்றி விளக்கியுள்ளார். அதாவது தான் ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் என்றும் தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார் அவர். பெண்மணியும் இதனை நம்பியிருக்கிறார்.

திருமணம்

மேலும், தான் விரைவில் ஜப்பானில் குடியேற இருப்பதாகவும் கூறியுள்ளார் அவர். ஒரு மெசேஜில் ஆயிரம் முறை ஐ லவ் யூ என்று சொன்னாலும் தன்னுடைய காதலை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை எனவும் அந்த மோசடி நபர் குறிப்பிட்டிருந்ததாக பெண்மணி காவல்துறையில் அளித்த புகாரில் தெரிவித்திருக்கிறார். விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்புவதற்கு நிறைய செலவு ஆகும் எனவும் பூமிக்கு திரும்பிய பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் எனவும் அந்த ஆசாமி வலைவிரிக்க பெண்மணியும் அதனை நம்பியுள்ளார். மேலும், விண்வெளியில் இருப்பதுபோன்ற ஜோடிக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் அனுப்பியிருக்கிறார்.

Woman scammed by fake astronaut for Rs 24 lakh

இதனை நம்பி 30,000 அமெரிக்க டாலர்களை அனுப்பியுள்ளார் அந்த அப்பாவி பெண். ஆகஸ்டு 19 முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரையில் 5 தவணைகளாக பணத்தை கொடுத்திருக்கிறார் பெண். ஆனால், மீண்டும் பணம் வேண்டும் என அந்த நபர் கேட்கவே சந்தேகமடைந்த பெண்மணி காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார். இந்நிலையில், அந்த மர்ம ஆசாமியை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.