சிறுவர்கள் மந்த போசணை அதிகமாக உள்ள 10 நாடுகளின் பட்டியலில் இலங்கை

0
604

உலகளாவிய ரீதியில் மந்தபோசணையினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை உயர்வாகக் காணப்படும் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்குவதாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் சுமார் 2.3 மில்லியன் சிறுவர்கள் உள்ளடங்கலாக 5.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் இருப்பதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஜுன் மாதம் 30 ஆம் திகதி வரையான கடந்த 6 மாதக் காலப்பகுதியில் தெற்காசிய நாடுகளின் மனிதாபிமான நிலவரம் எவ்வாறானதாகக் காணப்பட்டது என்பதைப் பகுப்பாய்வு செய்து அதன்மூலம் கண்டறியப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய அரையாண்டு அறிக்கையொன்றை யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் முக்கிய விடயங்கள்

இலங்கையில் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடியின் விளைவாக சிறுவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிபொருள் விலைகள், தொடர்ச்சியான மின்வெட்டு, உயிர்காக்கும் மருந்துப்பொருட்களுக்கான தட்டுப்பாடு ஆகியன வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினர் மீது பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

நாடளாவிய ரீதியில் சுமார் 2.3 மில்லியன் சிறுவர்கள் உள்ளடங்கலாக 5.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் இருப்பதுடன் அவர்களுக்கு அவசியமான போசணை, கல்வி மற்றும் நிதிசார் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உதவி வழங்கல் நடவடிக்கைகளை யுனிசெப் அமைப்பு ஆரம்பித்துள்ளது.

மேலும் உலகளாவிய ரீதியில் சிறுவர்கள் மத்தியில் மந்த போசணை உயர்வாகக் காணப்படும் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்ளடங்குவதுடன் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டின் காரணமாக அவசர சுகாதார சேவை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன் கல்வியைப் பெறுவதற்கான இயலுமை மற்றும் சிறுவர் பாதுகாப்பு ஆகியவற்றின் மீதும் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

அதேவேளை குடும்பங்களின் வருமான இழப்பின் விளைவாக சிறுவர்கள் வன்முறைகள் மற்றும் மனவழுத்தத்திற்கு முகங்கொடுத்திருப்பதுடன் பாடசாலைகளுக்கு சமுகமளிக்காத மற்றும் பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

இது இவ்வாறிருக்க பூட்டான், மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய தெற்காசியப் பிராந்திய நாடுகளில் சடுதியாக ஏற்பட்ட அனர்த்தங்கள் மற்றும் அவசர நிலைமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கென 16.1 மில்லியன் அமெரிக்கா டொலர்களை நன்கொடையாக வழங்குமாறு சிறுவர்களுக்கான யுனிசெப் அமைப்பின் மனிதாபிமான செயற்திட்டம் கோரிக்கை விடுத்திருந்தது.