கனடாவில் கருணைக்கொலை கோரிய பெண்!

0
170

கனடாவில் கோவிட் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தம்மை கருணை கொலை செய்யுமாறு கோரியுள்ளார்.

நீண்ட கால அடிப்படையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடையாத பெண் ஒருவர் மருத்துவ உதவியுடனான மரணத்தை அடைவதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளார்.

றொரன்டோவைச் சேர்ந்த ட்ராசி தொம்சன் என்ற ஐம்பது வயது மதிக்கத் தக்க பெண் ஒருவரே இவ்வாறு மருத்துவ உதவியுடனான மரணத்திற்கான முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக குறித்த பெண் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட போதிலும் இன்றளவிலும் அவர் கோவிட் தொற்றின் பாதிப்புக்களிலிருந்து மீள முடியாதிருக்கின்றார்.

இதனால் கடுமையான பொருளாதார நெருக்கடிகளையும் அவர் எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2016ம் ஆண்டு முதல் மருத்துவ உதவியுடன் மரணத்தை தழுவுவதற்கு நிபந்தனைகளின் அடிப்படையில் கனடாவின் சட்டத்தில் இடமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

நிதி நிலையை கருத்திற்கொண்டே தாம் இவ்வாறு மருத்துவ உதவியுடன் உயிரை மாய்த்துக்கொள்ள உத்தேசித்துள்ளதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

வலியுடன் மெது மெதுவாக மரணிப்பதா அல்லது வேகமாக மரணிப்பதா என்ற இரண்டு தெரிவுகளில் ஒன்றை தெரிவு செய்ய அவசியம் எழுந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட கால கோவிட் காரணமாக பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், உணவுச்செறிமானம் அடைவதில்லை எனவும், தலைசுற்றல் இருப்பதாகவும், சுவை மற்றும் வாசனை அறிந்து கொள்வதில் சிரமம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் தொற்றுக்கு இலக்காக முன்னதாக தொம்சன் சமையல் கலை வல்லுனராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ உதவியுடன் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு இரண்டு சுயாதீன மருத்துவர்களின் பரிந்துரை அவசியமானது.

தாம் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் நிச்சயமாக தமக்கு மருத்துவ உதவியுடன் உயிரை மாய்த்துக்கொள்ள அனுமதி கிடைக்கும் எனவும் தொம்சன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.