இலங்கையில் வரலாற்று வாய்ப்பு ஒன்று கைநழுவிப்போனது!

0
684

 இலங்கை அரசியல் வரலாற்றில் முதலாவது பெண் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கு கிட்டிய வாய்ப்பு, மீண்டுமொருமுறை தவறவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களுக்கிடையில் பொது இணக்கப்பாடின்மையே இந்த வாய்ப்பு கைநழுவிப்போக காரணமாய் அமைந்துள்ளது. இலங்கை நாடாளுமன்றம் இன்று முற்பகல்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இந்நிலையில் பிரதி சபாநாயகராக இரண்டாவது தடவையாகவும் தெரிவுசெய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அப்பதவியை மீண்டும் இராஜினாமா செய்ததால், நாடாளுமன்றத்தில் இன்று பிரதி சபாநாயகருக்கான தேர்வு முதல் விடயமாக நடைபெற்றது.

இதன்போது பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோஹினி குமாரி கவிரத்னவின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்மொழிய, அதனை எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல வழிமொழிந்தார். அத்துடன் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற அஜித் ராஜபக்சவின் பெயரை, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பிரேரித்தார்.

இதனையடுத்து பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டதால், அதற்கு சுதந்திரக்கட்சி, 10 கட்சிகளின் கூட்டணி உள்ளிட்டவை கடும் எதிர்ப்பை வெளியிட்டன. வாக்கெடுப்பின்றி, இணக்கப்பாட்டுடன் பிரதி சபாநாயகர் தெரிவுசெய்யப்பட வேண்டும், எனவே, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து, கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி முடிவொன்றை எடுக்குமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.