மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் மற்றும் இராணுவத்தளபதி!

0
597

திங்கட்கிழமை (9) இடம்பெற்ற சம்பவங்களுக்கு விதியை பேணத் தவறியது ஏன் என்பதை விளக்குவதற்காக காவல்துறை மா அதிபர் மற்றும் இராணுவத்தளபதி ஆகியோர் மே 12 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, அலரிமாளிகைக்கு அருகில் உள்ள மைன கோ கம போராட்டத் தளத்தின் மீது அரச சார்பு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, திங்கட்கிழமை காலை சாதாரணமாக குழப்பமான காட்சியாக மாறியது. 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் மன்றத்தினால் அலரிமாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, அரச சார்பு ஆதரவாளர்கள், அலரிமாளிகைக்கு அருகிலுள்ள மைனா கோ கம போராட்டத் தளத்தைத் தாக்கி, முகாமைக் கலைத்தனர்.

அதன் பின்னர், அவர்கள் கோட்டா கோ கம எனப்படும் காலி முகத்திடலில் உள்ள பிரதான போராட்டத் தளத்திற்குச் சென்று பல கூடாரங்களை அழித்ததுடன் ஆர்ப்பாட்டக்காரர்களையும் தாக்கினர்.

நிலைமையைக் கட்டுப்படுத்த இலங்கை காவல்துறை , கலகத் தடுப்புப் காவல்துறை, இலங்கை இராணுவம் மற்றும் ஏனைய சட்ட அமலாக்க முகவர் நிலையங்கள் வரவழைக்கப்பட்டதோடு, அமைதியின்மையைக் கட்டுப்படுத்த இலங்கை காவல்துறையினர் இறுதியில் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, சிறப்பு அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு, இலங்கை அரச தலைவர் அவசரகால நிலையை அறிவித்தார்.

ஒரு மாத காலப்பகுதியில் இலங்கையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவது இது இரண்டாவது தடவையாகும்.

இந் நிலையில் நேற்று ஏற்பட்ட கலவரத்தில் இடம் பெற்ற விதி மீறல்கள் பற்றி விளக்குவதற்காக காவல்துறை மா அதிபர் மற்றும் இராணுவத்தளபதி ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.