யாழில் மண்ணெணெய் கிடைக்காத நிலையில் உயிரிழந்த முதியவர்

0
76

இரண்டு தினங்களாக மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தும் மண்ணெணெய் கிடைக்காத நிலையில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் அளவெட்டி மத்தியைச் சேர்ந்த கந்தசாமி நடராசா (வயது 80) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த முதியவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மண்ணெண்ணெய் வாங்குவதற்காக அளவெட்டி – மல்லாகம் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளார்.

சில மணி நேரத்தில் மண்ணெண்ணெய் முடிந்து விட்டது என ஊழியர்கள் அறிவித்தனர். அதனால் அவருக்கு மண்ணெண்ணெய் கிடைக்காமலே வீடு திரும்பி இருந்தார்.

மறுநாளான நேற்றைய தினம் சனிக்கிழமை மீண்டும் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக சென்று நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்துள்ளார். அவர் அருகில் சென்றதும் மண்ணெண்ணெய் முடிவடைந்து விட்டது என ஊழியர்கள் தெரிவித்தனர்.

அதனால் கடும் மனவிரக்தியுடன் வீடு திரும்பியவர் , மனைவியிடம் இன்றும் தன்னால் மண்ணெண்ணெய் வாங்க முடியவில்லை என கவலையுடன் கூறி படுத்தவர் , சில நிமிடங்களில் படுக்கையிலையே உயிரிழந்துள்ளார்.

முதியவரின் இறப்பு அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது