2,000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்!

0
283

இலங்கையில், கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு பதவி விலகக் கோரி, வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த தொழிற்சங்கங்கள், நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.

இலங்கையில் நிலவும் கடும் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியால் ராஜபக்ஷே குடும்பத்தினர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் நேற்று தேசிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், மக்கள் நடமாட்டமின்றி வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இப்போராட்டத்திற்கு சுகாதாரத்துறை, தபால் நிலையம், துறைமுகம், ரயில்வே, போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, வங்கிகள், ஆசிரியர்கள், மாணவர் அமைப்புகள் உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.

2,000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூட்டு வர்த்தகப் பணிக்குழுவைச் சேர்ந்த ரவி குமுதேஷ் தெரிவித்தார். அத்தியாவசிய அவசர சேவைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான முழு அரசாங்கமும் பதவி விலக வலியுறுத்தப்பட்டது.

பதவி விலகாவிட்டால், வரும் 11ம் தேதி முதல் நாடு முழுவதும் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார். இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நிதியமைச்சர் அலி சப்ரி, 2019 நவம்பரில் இலங்கையில் ஜிஎஸ்டி வரி 15 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டது என்று வருத்தம் தெரிவித்தார்.

மேலும், 7 வரிகள் அகற்றப்பட்டன. இதன் விளைவாக, 2020 மற்றும் 2021 நிதியாண்டுகளில் மொத்தம் 10 லட்சம் வரி செலுத்துவோர் தலா ரூ.5 லட்சம் வரி விலக்கு பெற்றனர். இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. இன்று, 2020 இல் 9.1% ஆக இருந்த மொத்த GDP வளர்ச்சி, நடப்பு ஆண்டில் 8.7% என்று மதிப்பிடப்பட்டதில் இருந்து 7.7% ஆகக் குறைந்துள்ளது.