உய்குர் மக்களை பாதுகாக்க களமிறங்கும் கனடா!

0
786

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் வன்முறைகளிலிருந்து தப்பி வரும் உய்குர் இன மக்கள் மற்றும் பிற இன சிறுபான்மையினருக்கு உதவும் வகையில் கனே‍டிய நாடாளுமன்றக் குழுவினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் கனேடிய குடியேற்றம் மற்றும் குடியுரிமைக்கான நிலைக்குழுவினரின் கவனம் தற்போது உய்குர் மக்களின் மீது திரும்பியுள்ளது. தடுத்து வைக்கப்பட்ட மற்றும் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொள்ளும் இடம்பெயர்ந்த சீன உய்குர் மக்களை கனடாவில் தஞ்சமடைய அனுமதிக்கும் விதத்தில் நாடாளுமன்றக் குழுவினர் முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளனர்.

அதில் கடவுச்சீட்டு இல்லாதவர்களுக்கு தற்காலிக குடியுரிமை அனுமதி மற்றும் ஒற்றை பயண ஆவணங்கள் வழங்குதல் ஆகியவை அடங்குகின்றன. அதேசமயம் சீனாவில் உள்ள உய்குர் மற்றும் பிற துருக்கிய முஸ்லிம்களின் இனப் படுகொலை குறித்து கண்டிப்பதாகவும் கனடா அரசு தெரிவித்துள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி அதன் எல்லைகளுக்கு அப்பால் தனது செல்வாக்கை நீட்டிக்க முயற்சிக்கும் ஒரு சூழ்நிலையே இதுபோன்ற இன வன்முறைகளுக்கு பிரதான காரணமாகும்.

எனவே, உய்குர்களை குறிவைக்கும் சீனாவின் கொள்கைகளை ‘இனப்படுகொலை’ என்றும் ‘மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள்’ என்றும் மேற்குலக சட்டமன்றங்களுடன் இணைந்து கனடா நாடாளுமன்றம் முன்னதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது இதனையே அமெரிக்க அரசும் அறிவித்துள்ளது.

இதன் விளைவாக, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சட்ட வல்லுநர்கள் மேற்கு சீன பிராந்தியத்தின் மருத்துவ இறக்குமதியை தடை செய்வது குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும், கனடாவுக்கு வர விரும்பும் உக்ரைனியர்களுக்கு அவசர பயணத்துக்கான கனடா – உக்ரைன் அங்கீகாரம் உட்பட புதிய குடியேற்றக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவதாக கனடா அரசு தெரிவித்துள்ளதுடன், குறித்த கனேடிய நாடாளுமன்றக் குழுவானது உக்ரேனிய அகதிகளுக்கு சிறப்பு குடியேற்ற நடைமுறைகளை வழங்குவதற்கான ஒரு பிரேரணையையும் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.