கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடு!

0
847

கணித மாதிரி மதிப்பீட்டின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட கொரோனா மரணங்கள் தொடர்பிலான தரவுகளை உலக சுகாதார அமைப்பு இன்று (05-05-2022) வெளியிட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவல் படி தற்போது வரை கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 62 லட்சத்து 43 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரை நாடு முழுவதும் இதுவரை 5 லட்சத்து 23 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், உலகின் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்த கொரோனா உயிரிழப்புகள் குறித்து கணித மாதிரி மதிப்பீட்டின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில், கணித மாதிரி மதிப்பீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ளது.

அதில், உலக அளவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடு இந்தியா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 2020 ஜனவரி முதல் 2021 டிசம்பர் வரை கொரோனாவால் நேரடியாகவும், மறைமுகமாகவும் மொத்தம் 1 கோடியே 40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, உலக அளவில் இந்தியாவில் தான் கொரோனா தொடர்பான அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

2020 ஜனவரி முதல் 2021 டிசம்பர் வரை இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பாக மொத்தம் 47 லட்சத்து 29 ஆயிரத்து 548 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கணித மாதிரி மதிப்பீட்டின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட கொரோனா உயிரிழப்பு தொடர்பான அறிக்கையில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக 10 லட்சத்து 72 ஆயிரத்து 510 உயிரிழப்புகளுடன் ரஷ்யா இடண்டாவது இடத்தில் உள்ளது.

கொரோனா உயிரிழப்பு கணக்கீட்டில் கணித மாதிரி மதிப்பீட்டை பயன்படுத்தும் உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கைக்கு இந்திய அரசு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்தது வந்தது.

உலக சுகாதார அமைப்பு ஆய்வில் முதல் அடுக்கு நாடுகளில் இருந்து ( அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்றவை) நேரடியாக பெறப்பட்ட இறப்பு புள்ளிவிவரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியா உள்ளிட்ட இரண்டாம் அடுக்கு நாடுகளுக்கு கணித மாதிரி செயல்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா இந்த வழிமுறையை எதிர்க்கிறது என ஏற்கனவே தெரிவித்திருந்தது.

தற்போது, சர்ச்சைக்குரிய இந்த கணக்கீட்டின் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் பெறப்பட்ட தகரவுகளை கொண்டு உலக அளவில் இந்தியாவில் தான் அதிக கொரோனா உயிரிழப்புகள் என உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது.