நாட்டின் சட்டம் உருவாக்கப்பட்டுள்ள விதம் தவறு! – கொழும்பு பேராயர்

0
236

நாட்டின் சட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கையாள முடியும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளமை வருத்தத்திற்குரியது என கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

சட்டம் இவர்கள் இருவருக்கும் உச்சத்தில் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பேராயர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் தலைவர்கள் நீதியை நிலை நாட்ட வேண்டும் என புனித பாப்பரசர் தெளிவாக கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதனால், நாட்டின் பொறுப்புக் கூற வேண்டிய தலைவர்கள் நாட்டை பற்றி சிந்தித்து பணியாற்ற பழக்கிக்கொள்ள வேண்டும். இதற்கு பதிலாக நாடகங்களை நடிப்பதில் பயனில்லை.

சரியான முறையில் கடமையை நிறைவேற்ற வேண்டும். அதேபோல் இனங்கள், மதங்களுக்கு இடையில் பகைபுணர்வை ஏற்படுத்துவதை புறந்தள்ளி விட்டு, ஒரு நாடு என்ற வகையில் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் எனவும் பேராயர் கூறியுள்ளார்.

புனித பாப்பரசர் பிரான்சிஸின் சிறப்பு அழைப்பு இணங்க வத்திகான் சென்றிருந்த பேராயர், நாடு திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்து இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். புனித பாப்பரசரிடம் தமது துன்ப துயரங்களை முன்வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.