தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண கோரிக்கை விடுத்துள்ள உயர் நீதிமன்றம்!

0
461

இலங்கை கடற்படையினரால் ஒரு முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் விரைவில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம்  கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள் 68 பேரை விடுவிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அமைப்பின் தேசிய துணைத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு  நேற்று விசாரணைக்கு வந்தது. இதன்போது நீதிபதிகள், “மீனவர்கள் எதற்காக எல்லை தாண்டி செல்ல வேண்டும்? இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என தெரிவித்தனர்.

அத்துடன் அன்னிய நாட்டுக்கு சென்னை  உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தெரிவித்த நீதிபதிகள்,   தமிழ்நாடு மீனவர்களின் கைதுக்கு அனுதாபம் மட்டுமே தெரிவிக்க முடியும் எனவும் கூறினார்கள்.

இந்நிலையில் இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் மீனவர்களின் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் விரைவில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.