மிகைக் கட்டணவரி சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் ஏப்ரல் 07ஆம் திகதி

0
286

மிகைக் கட்டணவரி இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை ஏப்ரல் 07ஆம் திகதி நடத்துவதற்கு பிரதி சாபநாயகர் கௌரவ ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் வியாழக்கிழமை பிற்பகல் (24) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.பாராளுமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் 05 முதல் ஏப்ரல் 08 திகதிவரைக் கூட்டுவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டதுடன், ஏப்ரல் 06 தவிர ஏனைய நாட்களில் மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 வரையான நேரம் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 5ஆம் திகதி மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 வரை மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்ட 2021.12.24 திகதிய 2259/54ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி, விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் விளையாட்டு அமைச்சரினால் வெளியிடப்பட்ட 2022.01.18 திகதிய 2263/2 இலக்க அதிவிசேட வர்த்தமானி பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.ஏப்ரல் 6ஆம் திகதி மு.ப 10.00 மணி முதல் 10.30 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், அதன் பின்னர் மு.ப 10.30 மணி முதல் 11.00 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்படவுள்ளது.

அதன்பின், மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் போக்குவரத்து அமைச்சரால் வெளியிடப்பட்ட 2021.09.17 திகதிய 2245/31 ஆம் இலக்க, 2021.10.29 திகதிய 2251/63ஆம் இலக்க மற்றும் 2021.08.14 திகதிய 2240/37ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.ஏப்ரல் 07ஆம் திகதி மிகைக் கட்டணவரிச் சட்டமூலம் (இரண்டாவது மதிப்பீடு), துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரிச் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சரால் வெளியிடப்பட்ட 2022 ஜனவரி 06ஆம் திகதிய 2261/58ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி மற்றும் 2022 ஜனவரி 11 திகதிய 2262/19ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமனி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.ஏப்ரல் 08ஆம் திகதி மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் தனிஉறுப்பினர் பிரேரணைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ குணதில ராஜபக்ஷ, “அறநெறிப் பாடசாலைக் கல்வியை மேம்படுத்துவதற்குத் தேவையான பௌதீக வளங்களை வழங்குதல்” தொடர்பில் முன்வைக்கும் பிரேரணை, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கிங்க் நெல்சன், “சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களை வலுவூட்டுதல்” தொடர்பில் முன்வைக்கும் பிரேரணை, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ குணதில ராஜபக்ஷ, “சிறிய மற்றும் மத்திய அளவிலான தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கு தேசிய அபிவிருத்தி வங்கியொன்றையும் பொருளாதார தலைமைத்துவமொன்றையும் கட்டியெழுப்புதல்” தொடர்பில் முன்வைக்கும் பிரேரணை, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சமிந்த விஜேசிறி, “சகல அரச நிறுவனங்களையும் அரசுக்குச் சொந்தமான கட்டடங்களில் நிலையப்படுத்தல்” தொடர்பில் முன்வைக்கும் பிரேரணை உள்ளிட்டவை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அத்துடன், சகல தினங்களிலும் பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பி.ப 4.50 மணி முதல் பி.ப 5.30 மணிவரையான காலப் பகுதியில் முறையே ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான  பிரேரணை மீதான விவாதத்தையும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.