எதை இலக்கு வைக்கின்றார் கோத்தா?

0
402

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, வட மாகாணத்துக்கு அடுத்த மாதம் வரவுள்ளார். Gota Visit North Presidential Election Tamil News

அவரது வியத்கம அமைப்பின் அலுவலகத்தையும் யாழ்ப்பாணத்தில் அடுத்த மாத ஆரம்பத்தில் திறந்து வைக்கவுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலரான கோத்தபாய ராஜபக்ச, சிறுபான்மை மக்களின் வாக்குகளைக் குறிவைத்துச் செயற் பட்டு வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

மலையகத்துக்கு அண்மையில் சென்ற கோத்தபாய, தன்னை தமிழ் மக்களுக்கு நெருக்கமானவராகக் காட்டும் வகையிலான உடையலங்காரத்துடன் நின்றிருந்தார். இதன் பின்னர் தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை மாத்திரம் சந்தித்துப் பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தியிருந்தார்.

இவ்வாறானதொரு நிலையிலேயே வடக்கு மாகாணத்துக்கான அவரது பயணமும் இடம்பெறவுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தலைமையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் வடக்குப் பயணம் பற்றி ஆராயப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, கெஹெலிய ரம்புக்வெல்ல, பந்துல குணவர்தன மற்றும் கனக ஹேராத் உள்ளிட்ட வியத்கம அமைப்பின் முக்கிய செயற்பாட்டளர்கள் கலந்துகொண்டார்கள்.

வடக்கு உள்ளிட்ட நாட்டில் வாழும் அனைத்துச் சிறுபான்மை மக்களின் ஆதரவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு பரந்தளவிலான திட்டமொன்றினை வகுப்பது குறித்து இதன் போது பேசப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தலுக்கு பின்னர் வரவிருக்கும் அரச தலைவர் தேர்தலில் வெற்றிப்பெற வேண்டுமாயின் சிறுபான்மையின மக்களின் ஆதரவு முக்கியமானதாகும். இதற்கு முதலில் சிறுபான்மை இனச் சமூகத்தின் புத்திஜீவிகளை இணைத்து செயற்பட வேண்டும் என்று இந்தச் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொருளாதார ரீதியான வலுப்படுத்தலே தேசியப்பிரச்சினைக்கு தனது தீர்வென்ற பாணியில் அவர் தெரிவித்திருந்த கருத்தானது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.