மணிப்பூரில் தொடரும் வன்முறை: குக்கி இனத்தவர் குண்டுத்தாக்குதல் : சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி

0
38

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனத்தவர் மேற்கொண்ட வெடிகுண்டுத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நரன்சேனா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நேற்று வெள்ளிக்கிழமை இரவு (26) குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான மேலும் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குகி இனத்தைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழுவினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளபட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வன்முறையால் மீள்வாக்குப் பதிவு

மணிப்பூரில் உள் மணிப்பூர், வெளி மணிப்பூர் என 2 மக்களவை தொகுதிகள் உள்ள நிலையில் மக்களவைத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றன.

உள் மணிப்பூர் மக்களவை தொகுதியில் முழுமையாகவும் வெளி மணிப்பூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 15 சட்டப்பேரவை தொகுதிகளிலும் கடந்த 19 ஆம் திபதி தேர்தல் நடைபெற்றது.

இதன்போது 69.18 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதன்போது வன்முறையைத் தொடர்ந்து இரண்டு மாவட்டங்களில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் கடந்த 22 ஆம் திகதி மீள்வாக்குப்பதிவு இடம்பெற்றது.

மைதேயி – குகி இனப்பிரச்சினை

மணிப்பூரின் சமவெளி பகுதியில் பெரும்பான்மையானோராக மைதேயி சமூகத்தினர் காணப்படுகின்ற நிலையில் மலைப் பகுதிகளில் குகி பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.

மைதேயி சமூகத்தினருக்கு உத்தியோகப்பூர்வ பழங்குடி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு குகி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மணிப்பூரில் பதற்றம் ஏற்பட்டது.

கடந்த வருடம் மே மாதம் குகி இனத்தைச் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகாத்திற்கு உட்படுத்தப்பட்டு ஆடையின்றி ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்டப்பட்ட சம்பவம் முழு உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மைதேயி இனத்தைச் சேர்ந்த இளைஞர்களே இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டனர். இதன்போது 210 இற்கும்மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.