இந்தியாவால் வல்லரசாக உருவெடுக்க முடியுமா? விஸ்வரூபம் எடுத்து நிற்கும் சவால்கள்

0
69

இம்மாதம் 19ஆம் திகதி உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களவைத் தேர்தல் தொடங்க உள்ளது. ஆறு வாரங்களுக்கு நடைபெற உள்ள இந்த தேர்தலில் 96.9 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். தற்போதைய பிரதமரான நரேந்திர மோதி மற்றும் அவரது பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க முனைப்பு காட்டுகிறது.

அணு ஆயதம் கொண்டுள்ள நாடாகவும், நிலவில் தனது விண்கலத்தை தரையிறக்கிய நாடாகவும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, உலகின் அதிக மக்கள் தொகைக் கொண்ட நாடாக மாறிய இந்தியா, இங்கிலாந்து பொருளாதாரத்தை முந்தி தற்போது உலகின் 5வது வலிமை மிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது.

பலரும் இந்தியா உலகின் அடுத்த வல்லரசு நாடாக உருவெடுக்கும் என்று கணித்துள்ளனர். ஆனாலும், அந்த முன்னேற்றம் நம்பிக்கை மற்றும் எச்சரிக்கையுடன் கலந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தென்னாப்பிரிக்கா சென்றிருந்த போது பிரதமர் மோதி, “இந்தியா உலகின் வளர்ச்சி இயந்திரமாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டின் இறுதியில், கடைசி மூன்று மாதங்களில் 8.4 சதவீதமாக விரிவடைந்த பொருளாதாரத்தின் மூலம் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் என்ற அங்கீகாரத்தை பெற்றது இந்தியா.

ஒரு நாட்டில் உள்ள நிறுவனங்கள், அரசுகள் மற்றும் தனிநபர்களின் பொருளாதார செயல்பாடுகளை அளவிடும் GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி) மூலம் உலகப் பொருளாதாரங்களை வரிசைப்படுத்தலாம்.

அமெரிக்க முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி உட்பட பல நிதி நிறுவனங்களின் கூற்றுப்படி, 2027 ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஜெர்மனி மற்றும் ஜப்பானை முந்தி மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான வழித்தடத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது.

இந்தியா 1947 இல் சுதந்திரம் பெற்ற போது உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பல தசாப்தங்களாக நீடித்து வந்த ஆங்கிலேயரின் ஆட்சி, வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வசதிகள் செய்ய முடியாத அளவிற்கான மோசமான உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத் துறையையே விட்டுச் சென்றது.

அப்போது இந்தியாவின் தனிநபர் ஆயுட்காலம் 35 ஆண்டுகளாக இருந்தது. ஆனால் உலக வங்கியின் கூற்றுப்படி, இன்று அது கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்து 67 ஆண்டுகள் என்ற நிலையில் உள்ளது. அதே நேரத்தில் உலகளாவிய சராசரி 71 ஆண்டுகள் ஆகும்.

உலகின் அதிக ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. அதில் முக்கியமாக சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், வைரங்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட மருந்துகள் ஆகியவை அடங்கும். இந்தியாவின் செழிப்பு மிக்க சேவைத் துறை மற்றும் தொலைத்தொடர்பு, மென்பொருள் துறைகளின் வளர்ச்சியே அதன் பொருளாதார ஏற்றம் காண காரணமாக அமைந்தது.

ஆனால் அதே வேகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். HSBC யின் ஒரு மதிப்பீட்டின்படி, அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை உயரும்போது, 70 மில்லியன் வேலைவாய்ப்புகளை அது உருவாக்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் மூன்றில் ஒருபங்கை தாண்டி அதற்கு மேல் உருவாக்க வாய்ப்பில்லை.