பரபரப்பான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 2 ஓட்டங்களால் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

0
90

மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவிந்த்ரா சிங் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (09) கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் அத்தியாயத்தின் 23ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 2 ஓட்டங்களால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றிகொண்டது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இலகுவாக வெற்றிபெறும் என பஞ்சாப் கிங்ஸின் 15ஆவது ஓவரின்போது கணிப்பிடப்பட்டது. ஆனால், வெற்றி இலகுவாக கிடைக்கவில்லை. கடைசிப் பந்திலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் வெற்றி உறுதியானது.

183 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்று பரபரப்புக்கு மத்தியில் தோல்வி அடைந்தது.

பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

ஒரு கட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 15.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி பஞ்சாப் கிங்ஸுங்கு உயிர்கொடுத்தனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 27 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். எனினும் வெற்றி இலக்கை அடைய 3 ஓட்டங்களால் பஞ்சாப் கிங்ஸ் தவறியது.

ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 46 ஓட்டங்களுடனும் அஷுட்டோஷ் ஷர்மா 15 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 33 ஓட்டங்களுடனும்   ஆட்டம் இழக்காதிருந்தனர்.

அவர்களைவிட சாம் கரன் (29), சிக்கந்தர் ராஸா (28), ஜிட்டேஷ் ஷர்மா (19) ஆகியோர் தங்களாலான பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில் புவ்ணேஷ்வர் குமார் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பெட் கமின்ஸ், தங்கராசு நடராஜன், நிட்டிஷ் குமார் ரெட்டி, ஜெய்தேவ் உனத்காட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்களைக் குவித்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சார்பாக 6ஆவது விக்கெட்டில் நிட்டிஷ் குமார் ரெட்டி, அப்துல் சமாத் ஆகியோர் பகிரந்த 50 ஓட்டங்களே அதிசிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.

நிட்டிஷ் குமார் ரெட்டி மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 37 பந்துகளில் 5 சிக்ஸ்கள், 4 பவுண்டறிகளுடன் 64 ஓட்டங்களைக் குவித்தார்.

அவரை விட அப்துல் சமாத் (25), ட்ரவிஸ் ஹெட் (21), அபிஷேக் ஷர்மா (16) ஆகியோரே 15 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹர்ஷால் பட்டேல் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.