AI தொழினுட்பத்தை பயன்படுத்தி இந்திய தேர்தலை சீர்குலைக்கும் சீனா: மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரிக்கை

0
65

செயற்கை நுண்ணறிவு (AI) தொழினுட்பத்தை பயன்படுத்தி இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் தேர்தல்களை சீர்குலைப்பதற்கு சீனா சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான அரசியல் விளம்பரங்கள் மற்றும் காணொளிகள் வாக்காளர்களை திசைதிருப்பும் என தெரிவிக்கப்படுகின்றது. மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்திருந்தார்.

இதன்போது சமூக மேம்பாடு, பெண்களுக்கான வளர்ச்சி, சுகாதாரம், வேளாண் துறைகளில் புத்தாக்கம் போன்றவற்றிற்கு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பில் ஆலோசித்தனர். இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் குறித்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

2024 ஆம் ஆண்டு சுமார் 64 நாடுகளில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் சீன அரசு ஆதரவு கொண்ட சைபர் குழுமங்கள் வட கொரியாவின் உதவியோடு தேர்தல்களை சிதைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தொழினுட்பத்தை பயன்படுத்தி வேட்பாளர் ஒருவரின் அறிக்கை குறித்து தவறான தகவலைப் பரப்ப முடியும் என்பதுடன் சில நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை மறைக்க முடியும் என கூறப்படுகின்றது.

சீனாவின் இவ்வாறானதொரு முயற்சியின் தாக்கம் பாரிய தாக்கத்தனை செலுத்தும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. தாய்வான் தேர்தலில் சீன ஆதரவு சைபர் குழுக்கள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான காணொளிகளை சமூக வலை தளங்களில் பரவலாக்கி மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்த முயன்றன.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் “மக்கள் யாரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம்” என கூறுவது போல் ஏஐ தொழில்நுட்பம் மூலம் குரல் பரப்பப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.