சம்பள உயர்வை வழங்க மறுக்கும் கம்பனிகள்; கடும் கண்டனம் தெரிவிக்கும் ஜீவன்

0
56

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வை வழங்குவதற்கே பெருந்தோட்ட கம்பனிகள் முன்வந்துள்ள நிலையில் இதனை ஏற்கமுடியாதெனவும் மற்றும் 1,700 ரூபா அவசியம் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக நிற்கின்றோமெனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் மற்றும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான கலந்துரையாடலொன்று தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நேற்று (27) நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்துள்ளார்.

கூட்டு ஒப்பந்தம்

தேசிய தொழிலாளர் சபையில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இச்சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்தன.

பெருந்தோட்டக் கம்பனிகளால் சம்பள உயர்வு தொடர்பில் வழங்கப்பட்டுள்ள முன்மொழிவு தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

எனினும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கம்பனிகளால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நிராகரித்துள்ளன.

இந்நிலையில் நடைபெற்ற இச்சந்திப்பின் பின்னர் ஜீவன் தொண்டமான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வை வழங்க கம்பனிகள் முன்வந்துள்ளன.

தோட்டத்தொழிலாளர்கள்

எனினும், இதனை ஏற்கமுடியாது என அனைத்து தொழிற்சங்கங்களும் தெரிவித்த நிலையில் 1,700 ரூபாவையே கோரியதோடு அந்த தொகையில் உறுதியாக நிற்கின்றோம் என தெளிவாக எடுத்துரைத்தோம்.

சம்பள நிர்ணய சபையை கூட்டுவதற்கு தொழில் அமைச்சர் ஒப்புகொண்டுள்ளதுடன் ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் நல்ல தீர்வு கிடைக்கும் அத்தோடு நாட்கூலி முறைமை பொருத்தமற்றது.

ஆகையால் நிரந்தரமானதொரு தீர்வை நோக்கி நகர்வதுடன் அந்த நிரந்தர தீர்வை அடைய காலம் எடுப்பதோடு அதுவரை ஆயிரம் ரூபாவிலேயே இருக்க முடியாது என்பதால்தான் 1,700 ரூபா கோருகின்றோம்.

சம்பளபிரச்சினை

ஒரு குடும்பமொன்று மூன்று வேலைகள் சாப்பிட்டு வாழ வேண்டுமெனில் 76 ஆயிரம் ரூபா அவசியம் ஆனால் பெருந்தோட்ட பகுதிகளில் சராசரி வருமானம் 42 ஆயிரமாக உள்ள நிலையில் இதனை ஏற்கமுடியாது. அனைத்து தொழிற்சங்கங்களும் அரசியல் செய்யாமல் ஒற்றுமையாக இருந்தால் தீர்வை அடையலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த சந்திப்பில் அமைச்சர்களான மனுஷ நாணயக்கார, ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் வடிவேல் சுரேஷ் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி உள்ளிட்ட சிலர் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.