ஜெயலலிதாவின் உடைமைகளை அரசிடம் ஒப்படைக்க விதிக்கப்பட்ட தடை நீடிப்பு: விசாரணை ஒத்திவைப்பு

0
64

சொத்து குவிப்பு வழக்கின் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடைமைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த உடைமைகளை ஏலம் விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜெயலலிதாவின் தங்க நகைகள் மற்றும் பொருட்களை தமிழக அரசிடம் கடந்த 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமை கோரி ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை அந்த சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது ஜெயலலிதாவின் உடைமைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று (26) விசாரணைக்கு வந்தது. அதன்போது கர்நாடக அரசு தரப்பில் ஜெ.தீபாவின் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதுவரையில் ஜெயலலிதாவின் உடைமைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது.