108 அடி ராஜகோபுர மஹா கும்பாபிஷேகம்!

0
67

நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான நூதன ஷப்ததள 108 அடி ராஜகோபுர அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக திருக்குட முழக்கு பெருஞ்சாந்தி பெருவிழா காலை 9.25 மணி முதல் 10.37 மணிவரை உள்ள சுபவேளையில் இன்று (25) சிறப்பாக இடம்பெற்றது.

திருநாட்டின் மத்திய மாகாணத்தின் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேக பெருவிழாவினை முன்னிட்டு கிரியா ஆரம்பம் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமானது.

அதனை தொடர்ந்து 21 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை எண்ணெய்க்காப்பு இடம்பெற்று இன்று மங்கல கணபதி வழிபாடு, புண்ணியாகவாசனம், யாகபூஜை,ஹோமம்,மஹா புணர்குதி,விசேட தீகராதனை, வேத தோத்திர திருமுறை பாரயாணம், அந்தர்பலி, பகிர்பலி, நாத தாள கீத வாத்திய சமர்பணங்கள், யாத்தரா தானம், கும்ப உத்தாபனம்,ஆகியன இடம்பெற்று பக்தர்களின் ஆரோஹரா கோசம் முழங்க கும்பாபிசேகம் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து தசமங்கள தரிசனம்,எஜமான் அபிசேகம்,ஆசீர்வாதம்,குருமார் சம்பாவன கௌரவிப்பு, விசேட பூஜைகள் இடம்பெற்று,அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.

இந்த கும்பாபிஷேக பெரு விழாவில் நுவரெலியா மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கும்பாபிஷேக பெருவிழாவினை முன்னிட்ட ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறையும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.