அரசினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி மீளப்பெறப்படும்: விஜயதாச உறுதி

0
61

இலங்கையில் சிறுமியொருவர், தனது சொந்த விருப்பத்திற்கேற்ப பாலுறவு கொள்வதற்கான வயது தொடர்பான தண்டனைச் சட்டத்தின் 19வது அத்தியாயத்தை திருத்துவதற்காக, வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி மீளப்பெறப்படவுள்ளது.

2024 பெப்ரவரி 09 ஆம் திகதி அரசினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியே மீளப்பெறப்படும் என நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

1995 ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, 16 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவர், தமது சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் உறவு வைத்திருந்தாலும், அது குற்றச்செயலாக கருதப்படும்.

நாடாளுமன்ற திருத்தம்
எவ்வாறாயினும், நீதி அமைச்சரால் முன்வைக்கப்பட்ட குற்றவியல் திருத்தத்தில் இந்த வயதை 14 ஆகக் குறைக்க முயற்சிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ராஜபக்ச,

இந்த வரைவு முன்வைக்கப்பட மாட்டாது எனவும் அது நாடாளுமன்றத்தில் இருந்து மீளப் பெறப்படுவதாகவும் சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த வரைபு உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டபோது, நாங்கள் அதைத் தொடர மாட்டோம் என்று சட்டமா அதிபருக்கு தெரிவித்ததாக குறிப்பிட்ட அமைச்சர், மாறாக, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, முடிவு எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.