பிரித்தானியாவில் இந்த பெண் போராளியை கொலை செய்தது நாங்கள்தான்!

0
90

தயாபரன் சாருமதி என்ற இந்த முன்னாள் பெண் போராளி நேற்று பிரித்தானியாவில் மரணமடைந்தார். கடுமையான இரத்த அழுத்தம் காரணமாக மூளையின் இரத்த நரம்புகள் வெடித்து அவரது மரணம் பரிதாபகரமாக நிகழ்ந்துள்ளது.

ஐந்து குழந்தைகளின் தாயாராகிய இந்தப் பெண்ணின் மரணத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள்தான் காரணம் என்கின்ற குற்ற உணர்வுடன்தான் இந்த பத்தியை எழுதுகிறோம்.

சாருமதியின் கணவரும் ஒரு முன்னாள் போராளி. பெயர் சங்கீதன்(தயாபரன்). புலம்பெயர்ந்த சில முன்னாள் போராளிகள் மற்றும் தேசப்பற்றாளர்களை இணைத்து பிரித்தானியாவில் உலகத் தமிழர் வரலாற்று மையம் என்ற ஒரு கட்டமைப்பை உருவாக்கி நடாத்தி வருகின்றார். புலம்பெயர்ந்து வந்தும் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகின்ற அவர் மீது எம்மில் பலரால் காழ்புணர்வுடன் முன்வைக்கப்பட்டு வந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்தான் இந்தப் பெண்ணின் உயிரைப் பரிதாபரமாகப் பறித்துவிட்டது என்று கூறுகின்றார்கள் சக போராளிகள்.

அண்மையில் சாந்தனின் மரணம் தொடர்பாக தயாபரன்(சங்கீதன்) வெளியிட்டிருந்த ஒரு கண்டன அறிக்கை காரணமே இல்லாமல் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அவரது குடும்பமும் படு கேவலமாக விமர்சிக்கப்பட்டது. இதுபோன்ற தரம் தாழ்ந்த விமர்சனங்கள் அவரது மனைவிக்குச் சிலரால் அனுப்பி வைக்கப்பட்டன. அந்த விமர்சனங்களே அந்த அப்பாவிப் பெண்ணின் உயிரைப் பறித்துவிட்டதாக அந்தப் பெண்ணின் நண்பிகள் கூறுகின்றார்கள்.

சங்கீதன் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனம் வைத்து அவரை வேலமாக திட்டித் தீர்த்தவர்கள் தமிழ் இனத்தின் எதிரிகள் அல்ல. புலம்பெயர் மண்ணில் செயற்பட்டு வருகின்ற தமிழ் செயற்பாட்டாளர்கள், சக போராளிகள். இன்று ஒரு பெண் போராளியின் பரிதாபகரமான மரணத்துக்குக் காரணமாணவர்கள் நாங்கள்தான் என்பதை வெட்கத்துடன் கூறிக் கொள்கிறேன்.

பொதுவாழ்வில் ஈடுபடுகின்றவர்கள் மீது விமர்சனங்கள் வருவது தவிர்க்க முடியாததுதான். ஆனால் விமர்சனங்கள் என்பது ஆரோக்கியமான விமர்சனங்களாக இருக்கவேண்டும். அந்த விமர்சனங்களில் ஒரு பண்பு இருக்க வேண்டும். அந்த விமர்சனங்கள் ஆக்கபூர்வமானவைகளாக அமைந்திருக்க வேண்டும்.

முன்வைக்கப்படும் விமர்சனங்கள் ஒருவருடைய செயற்பாடுகளை குறித்ததாகவே அமைந்திருக்க வேண்டும். அந்த நபரை நெறிப்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும்.

தமிழர் நலன்சார்ந்து செயற்படுபவர்கள் மீது ‘வட்ஸ் அப் குறுப்’களில் எம்மில் சிலரால் பரிமாறப்பட்டு வருகின்ற வசைபாடல்கள், ஒருவரது புகைப்படங்களை, அவரது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை நிர்வாண புகைப்படங்களுடன் இணைத்து வெளியிடப்படுகின்ற விடயங்கள். உண்மையிலேயே இது ஒரு ஆரோக்கியமான சமூகத்தின் வெளிப்பாடு அல்ல.

வெட்கப்படவேண்டிய காரியங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போன்று எம்மில் சிலர் நடந்துகொள்வது எப்படி ஒரு குடும்பத்தைப் பாதிக்க காரணமாகி விடுகின்றது என்பதற்கு சாருமதி தயாபரனின் மரணம் ஒரு உதாரணம்.

தமிழ் இனத்துக்காகச் சிந்திக்க முன்வருகின்றவர்களை போராட முன்வருகின்றவர்களை எமது ஆரோக்கியமற்ற விமர்சனங்கள் எப்படி பொதுவாழ்வை விட்டு விலகி அச்சத்துடன் ஓதுங்க வைகக்கும்டியாக அமைந்து விடுகின்றன என்பதற்கு இந்த தங்கையின் மரணம் ஒரு மோசமான சாட்சி.

எங்கோ ஒரிருவர் மாத்திரம் பார்த்துவிட்டு கடந்து செல்கின்ற இதுபோன்ற அழுக்குகளை காவிச்சென்று சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கி அவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்து ரகின்ற  சிலரது மனோபாவம் எப்படி ஐந்து குழந்தைகளை தாயில்லாத பிள்ளைகளாக்கி அழ வைத்திருக்கின்றது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த படிப்பினை. எம்மையிட்டு வெட்கப்படுவோம். எமது செயலை நினைத்துக் கோபப்படுவோம். இனியாவது பொறுப்புடன் நடந்துகொள்வோம்.