மூன்றே மாதத்தில் பக்தர்கள் செய்த சாதனை: பிளாஸ்டிக் மலையாக மாறிய சிவனொளிபாதமலை

0
105

2023 டிசம்பர் தொடக்கம் 2024 வரையான சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகி மூன்று மாதங்களுக்குள் நல்ல தண்ணியிலிருந்து சிவனொளிபாதமலை உடமலுவா வரையான வீதியில் பக்தர்களால் கைவிடப்பட்ட 3 தொன் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச சபையின் செயலாளர் எஸ். ராஜவீரன் கூறுகிறார்.

பக்தர்கள் எடுத்துச் செல்லும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள்

சிவனொளிபாத மலைக்கு செல்லும் பக்தர்கள் எடுத்துச் செல்லும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை அப்புறப்படுத்த குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், சில பக்தர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை குப்பைத் தொட்டிகளில் அப்புறப்படுத்தினாலும் சிலர் தண்ணீர் போத்தல்களை சுற்றுச்சூழலுக்குள் வீசி விடுவதாகவும் அவர் சுட்டிகாட்டுகின்றார்.

சமைத்த உணவுகளை உண்ணுமாறும் அப்புறப்படுத்துவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் அப்புறப்படுத்துமாறும் யாத்திரிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்ட போதிலும் அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் நிலை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவனொளிபாதமலை பருவகாலம் என்றாலே நாடளாவிய ரீதியில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு இடமாக காணப்படுகின்றது.

புனித தலமாக பார்க்கப்படும் சிவனொளிபாத மலையில் இவ்வாறு பொதுமக்கள் தாங்கள் எடுத்துச்செல்லும் பொருட்கள் மற்றும் கழிவுகளை அங்கேயே விட்டு வருகின்றமையானது மிகவும் கண்டிக்கதக்கவிடயமாகும்.

மேலும், இவ்வாறான பழக்கவழக்கங்கள் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் குப்பைகளை கண்ட இடத்தில் போட்டு செல்வதற்கு வழிகாட்டியாக அமைந்துவிடக்கூடாது.

பொதுவாக சிவனொளிபாத மலை பருவகாலத்தில் பல இளைஞர்- யுவதிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினர் துப்புரவு பணிகளிலும் ஈடுபடுவர்.

அவர்கள் எவ்வித எதிர்பார்ப்புமின்றி சிவனொளிபாத மலையில் குப்பைகள் கொட்டப்படும் இடங்களை சுத்தம் செய்கின்றார்கள். அவர்கள் சுத்தம் செய்ய இருக்கின்றார்கள் என எண்ணி கூட எம்மில் பலர் அந்த புனித தலத்தை குப்பை மேடாக மாற்றி வருகின்றோம்.

எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் இருக்க அரசாங்கம் சார்பாக சட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் விடத்து இவற்றை கட்டுப்படுத்தலாம்.

மேலும், அப்பகுதிக்கு செல்லும் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களை கண்ட இடத்தில் வீசிவிட்டு வராமல் குப்பை தொட்டிகளை பயன்படுத்துவது இயற்கையை பாதுகாக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.