ஒலிம்பிக்கில் தாய்ப்பால் கொடுக்கும் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஏற்பாடு; ஏற்பாட்டுக் குழு அறிவிப்பு

0
92

பாரிஸ் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் பாலூட்டும் விளையாட்டு வீராங்கனைகளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் தாய்ப்பாலூட்டும் விளையாட்டு வீராங்கனைகளுக்காக சிறப்பு ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பிரெஞ்சு ஜூடோ நட்சத்திர வீராங்கனையான கிளாரிஸ் அக்பெக்னெனோ (Clarisse Agbegnenou) விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் சமீபத்தில் தாயான விளையாட்டு வீராங்கனைகளுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

இந்த கோரிக்கைக்கமைய, தாய்ப்பாலூட்டும் பிரான்ஸ் நாட்டு விளையாட்டு வீராங்கனைகளுக்காக, விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடத்திற்கு சற்று தொலைவில் உள்ள ஹொட்டல்களில் அறைகள் ஒதுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்ட அறைகளில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் தங்குவதுடன், அவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் நேரத்தில் பிள்ளைகளுடைய தந்தைகள் அந்த அறைகளில் தங்கி பிள்ளைகளை கவனித்துக் கொள்ளலாம் என பிரான்ஸ் ஒலிம்பிக் குழுவின் செயலாளர் ஜெனரலான ஆஸ்ட்ரிட் குயார்ட் (Astrid Guyart) தெரிவித்துள்ளார்.

குடும்பங்களுக்கான ஒதுக்கப்படும் மொத்தச் செலவு சுமார் 40,000 யூரோக்கள் ($43,000) என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரையிலும், பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8 வரையிலும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.