முள்ளிவாய்க்கால் சிறுவர்கள்? காஸாவிற்கு ஒரு மில்லியன் நிதி உதவி: இலங்கை அரசின் தீர்மானத்திற்கு விமர்சனம்

0
94

காஸாவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காஸா சிறுவர்களுக்கான நிதியம் (Children of Gaza Fund) என்ற அமைப்பை உருவாக்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்மொழிவுக்கு அமைச்சரவை நேற்று திங்கட்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அனைத்து அமைச்சுகளும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களும் இஃப்தார் நிகழ்வுகளை நிறுத்தி இந்த அமைப்பிற்கு நிதி சேர்ப்பதற்கான பங்களிப்பை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் நன்கொடையாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் அதிகாரப்பூர்வமாக ஐக்கிய நாடுகள் சபையின் முகவர்கள் மூலம் பாதிக்கப்பட்ட காஸா சிறுவர்களுக்கு வழங்கப்பட்டவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த முயற்சியை அனைவரும் பாராட்டுகின்றனர். அத்துடன் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் காஸாவில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவி வழங்க முன்வந்ததையும் வரவேற்கின்றனர்.

அதேவேளை 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரின் போது ஆயிரத்திற்கும் அதிகான சிறுவர்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளனர். அதற்கான பொறுப்புக்கூறல் எதுவும் இதுவரை இல்லை.

ஜெனிவா மனித உரிமை சபை தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட பல விடயங்கள் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளன.

இறுதிப் போரில் பாதிக்கப்பட்ட குறிப்பாக முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு உதவிகள் நிவாரணங்கள் வழங்கியதாக இலங்கை அரசாங்கம் அறிக்கை மூலமாக ஜெனீவாவில் தெரிவித்தபோதும் இதுவரை உரியமுறையில் பாதிக்கபபட்ட தமிழ் மக்களுக்கு உதவிகளும் கிடைக்கவில்லை நீதியும் கிடைக்கவில்லை.

இதனால் தமிழர்கள் சர்வதேச நீதியை கோருகின்றனர். இந்தநிலையில் காஸாவில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவியளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானம் வேடிக்கையானது என்ற கருத்துக்களும் இல்லாமல் இல்லை.