எண்ணங்கள் மூலம் கணினியை கட்டுப்படுத்தும் கருவி உருவாக்கம்

0
137

ஒரு சிறிய கால்குலேட்டர் எப்படி வேலை செய்கிறது என்றே நமக்குத் தெளிவாய் தெரியாது. அப்படி இருக்கையில் காற்றில் எப்படி கற்றைகள் கலந்தது? செய்யறிவுகள் எப்படி இயங்குகின்றன? போன்ற கேள்விகள் முன்னால் நாம் நெருப்பைப் பார்த்து மிரண்ட ஆதிமனிதனாக நிற்கும் நிலையில் தினமொரு அறிவியல் அதிசயம் நிகழ்ந்துகொண்டுதானிருக்கிறது.

அந்த வரிசையில் நம் முன்னால் மேலுமொரு நெருப்பை மெட்டா நிறுவனர் கொடுத்துள்ளார். மனிதனின் மூளையில் ஏற்படும் மிக நுண்ணிய மின் சமிக்ஜைகள் மூலம் கணினியைக் கட்டுப்படுத்தும் கருவி ஒன்றை உருவாக்கிவருவதாக மார்க் சக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

தனது புதிய கருவியைப் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்துள்ள அவர் இந்த கருவி மனிதனின் கை அசைவுகள் மற்றும் மூளை சமிக்ஜைகளை இணைத்து அதன் மூலம் கணினி சாதனங்களைப் பயன்படுத்தலாம் எனக் கூறுகிறார்.

 நரம்பியல் தொழில்நுட்பம்

இந்த நரம்பியல் தொழில்நுட்பம் சார்ந்த ஆர்வம் புதிதல்ல. ஏற்கனவே எலான் மஸ்க்கின் நியூரோ லிங்க் எனும் நிறுவனம் இந்த வகையிலான தொழில்நுட்பம் ஒன்றினை மனித மூளையில் பொறுத்தி அதன் மூலம் கணினிகளைப் பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறது.

அதுமட்டுமின்றி சிறிய கணினி சிப்பை, மனிதர் ஒருவரின் மூளையில் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி, சோதனைகளில் வெற்றி கண்டுவருவதாகவும் அது தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மார்க் அறுவை சிகிச்சை ஏதுமின்றி அணிந்து கொள்ளும் கருவியாக இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதாகவும் இன்னும் 3 வருடங்களுக்குள் தனது புதிய கருவியை விற்பனைக்கு தயார் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.