இந்திய இளம்பெண் மீது கார் மோதிக் கொன்றுவிட்டு சிரித்த அமெரிக்க பொலிசார்

0
98

அமெரிக்காவில், சாலையைக் கடக்கும்போது பொலிஸ் கார் ஒன்று மோதியதில் தூக்கி வீசப்பட்ட இந்திய மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

அந்த இளம்பெண் மீது மோதிய காரில் இருந்த பொலிசார், அந்த இளம்பெண் குறித்து மோசமாக விமர்சித்து சிரிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி கடும் அதிர்ச்சியை உருவாக்கியது. இந்திய பிரபலங்கள் பலர் அந்த சம்பவம் தொடர்பில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜானவி (Jaahnavi Kandula, 23). அமெரிக்காவில் கல்வி பயின்று வந்த ஜானவி, Seattle நகரில் சாலை ஒன்றைக் கடந்துகொண்டிருக்கும்போது, வேகமாக வந்த பொலிஸ் கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது.

மணிக்கு 119 கிலோமீற்றர் வேகத்தில் வந்த அந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அந்த இளம்பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

சிரித்த பொலிசார்

இந்நிலையில், அந்தக் காரிலிருந்த பொலிசார், அந்த இளம்பெண்ணைக் கொன்றுவிட்டு, அதைக் குறித்து சற்றும் வருத்தப்படாமல், அவரை கேலி செய்து சிரிக்கும் காட்சி ஒன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியது.

Kevin Dave என்னும் பொலிசார் அந்தக் காரை ஓட்டிய நிலையில், அவருடன் அதே காரில் பயணித்த பொலிஸ் யூனியனைச் சேர்ந்தவரான Daniel Auderer என்பவர், அவள் ஒன்றும் 40 அடி தூரமெல்லாம் தூக்கி வீசப்பட்டது போலத் தெரியவில்லை, ஆனாலும், அவள் செத்துவிட்டாள் என்று சொல்லிவிட்டு சிரித்துள்ளார். அப்போது தனது சட்டையிலிருந்த கமெராவை அவர் அணைக்க மறந்துவிட்டிருக்கிறார், அவர் சிரிப்பதை வெளியாகியுள்ள வீடியோவில் கேட்கலாம்.

மற்றொரு அதிர்ச்சி

இந்நிலையில், இந்த வழக்கில் எடுக்கப்பட்டுள்ள முடிவொன்று ஜானவியின் குடும்பத்தினருக்கு பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது.

அந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நீதித்துறை அதிகாரியான Leesa Manion என்பவர், Kevin மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்வதற்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி, அவர் அவசர அழைப்பு ஒன்றிற்காக வேகமாக வாகனம் ஓட்டியதை தவறு சொல்லமுடியாது என்று கூறியுள்ளார்.

அத்துடன், ஜானவியை மோசமாக விமர்சித்த Danielஇன் கருத்துக்கள் Kevinஉடைய நடத்தையை பாதிக்காது என்றும் கூறியுள்ளார்.

Leesaவின் முடிவுகள் ஜானவி குடும்பத்தினருக்கு பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ள நிலையில், அவர்கள் Kevin மீதும், Seattle பொலிஸ் துறை மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள். அத்துடன், Danielஐ உடனடியாக பணிநீக்கம் செய்யவேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளார்கள்.

Daniel மீது, மார்ச் மாதம் 4ஆம் திகதி துறை ரீதியான விசாரணை துவங்க உள்ளது.