புதிய அரசாங்கத்திற்கான முறையான கூட்டணி: பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் பற்றிய தகவல்

0
103

பாகிஸ்தான் தேர்தல் சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு இரண்டு அரசியல் கட்சிகள் முறையான உடன்பாட்டை செவ்வாயன்று (20) எட்டியுள்ளன.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PMLN) கட்சி, புதிய நிர்வாகத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) ஆதரிக்கும் என்று அவர்கள் கூட்டாக அறிவித்தனர்.

பெப்ரவரி 8 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சார்பு வேட்பாளர்களை விட இரு கட்சிகளும் குறைவான இடங்களைப் பெற்றன.

கூட்டணி அமைப்பதற்கு இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தனது எதிர்ப்பின‍ை வெளியிட்டது. இம்ரான் கானின் ஆதரவாளர்களை அதிகாரத்தில் இருந்து விலக்கி வைப்பதற்காக தேர்தலில் வாக்கு மோசடி செய்யப்பட்டதாகவும் அவர்கள் குற்றச்சாட்டினை முன்வைக்கின்றனர்.

இந் நிலையில் கூட்டணி அமைப்பதற்கான ஆரம்ப ஒப்பந்தத்தை எட்டிய ஆறு நாட்களுக்கும் பின்னர், பிஎம்எல்என் மற்றும் பிபிபி செவ்வாயன்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒரு முழு உடன்பாடு எட்டப்பட்டு விட்டதாக அறிவித்தது.

கூட்டணியின் நோக்கம்

பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரோ (Bilawal Bhutto Zardaro), நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதே கூட்டணியின் நோக்கம் என விவரித்தார்.

முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவருமான ஷாபாஸ் ஷெரீப் (Shahbaz Sharif), பொருளாதார மற்றும் பிற சவால்களைச் சமாளிக்க கூட்டணி அமைக்க நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார்.

பிரதமர் யார்?

இதன் மூலமாக முன்னாள் பிரதமர் நாவாஸ் ஷெரிப்பீன் சகோதரரான ஷாபாஸ் ஷெரீப் (Shahbaz Sharif) இரண்டாவது முறையாக பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பேற்பார். அதே நேரத்தில் பிபிபி இன் ஆசிப் அலி சர்தாரி ஜனாதிபதியாகக் கூட்டணியின் வேட்பாளராக இருப்பார்.

ஷெரீப், 2022 இல் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் இம்ரான் கான் வெளியேற்றப்பட்டபோது அவருக்குப் பதிலாக பிரதமராக நியமிக்கப்பட்டார்.

பிரதமர் தெரிவு முறை

பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையானது நாடாளுமன்ற வாக்கெடுப்பை உள்ளடக்கியது. இது பெப்ரவரி இறுதிக்குள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சில வாரங்களில் ஜனாதிபதியை தீர்மானிக்க தனி தேர்தல் நடத்தப்படும். மற்ற முக்கிய அரசுப் பதவிகளை யார் ஏற்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கூட்டணிக்கான பின்னணி

இந்த மாத தொடக்கத்தில் நடந்த சர்ச்சைக்குரிய நாடாளுமன்றத் தேர்தல் உறுதியான முடிவைத் தரவில்லை. இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போதிலும் அவருடைய ஆதரவு வேட்பாளர்கள் ஒரே கட்சியின் கீழ் இல்லாமல் சுயேட்சைகளாக போட்டியிட வேண்டிய கட்டாயத்தை எதிர்கொண்டனர்.

அதன்படி, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) ஆதரவுடன் கூடிய வேட்பாளர்கள் தேர்தலின் முடிவில் பாரிய வெற்றியைத் தழுவினர்.

எனினும், தேசிய சட்டமன்றத்தில் அவர்களின் 93 இடங்கள் அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான 169 பெரும்பான்மையை விட குறைவாகவே இருந்தன.

அதானல் மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பிஎம்எல்என், பிபிபி உடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல இது வழி வகுத்தது. பிஎம்எல்என் 75 இடங்களை வென்றது. அதே நேரத்தில் பிபிபி 54 இடங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.