சீனாவில் களைகட்டும் ஒட்டகச் சவாரி: விசித்திரமான சமிக்ஞை விளக்குகள் அறிமுகம்

0
95

சீனாவின் வடமேற்கில் உள்ள கங்சு பகுதியின் பாலைவனத்தின் அழகைக் கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

அவ்வாறு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஒட்டகச் சவாரி மூலம் மிங்ஷா மலை மற்றும் பாலைவனப் பகுதிகளின் அழகைக் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீண்ட வரிசையில் வரும் ஒட்டகச் சவாரி போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், ஒட்டகங்கள் மட்டும் செல்லும் அங்கு ஏராளமான ஒட்டக சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

அந்த சமிக்ஞை விளக்குகளில் பச்சை நிற விளக்குடன் கூடிய ஒட்டகம் மின்னும்போதுதான் ஒட்டகங்கள் செல்ல வேண்டும். சிவப்பு நிறத்திலான ஒட்டகம் மின்னும்போது ஒட்டகங்கள் காத்திருக்க வேண்டும்.

2019 கொவிட் தொற்று நோய்க் கட்டுப்பாட்டுக்குப் பின்னர் இப்போது மீண்டும் அப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் 3.7 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் கங்சு பகுதியில் உள்ள மிங்ஷா மலைக்கு வருகை தந்துள்ளனர்.

1990களில் விவசாயிகளில் சிலர் மட்டுமே ஒட்டகங்கள் வளர்த்து வந்தனர். இப்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததை அடுத்து, அதிகமான விவசாயிகள் ஒட்டக வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இப்போது அங்கு 2,000க்கு மேற்பட்ட ஒட்டகங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஒட்டகச் சவாரிக்கு 100 யுவான் (S$19) வசூலிக்கப்படுகிறது. ஒட்டகம் ஒவ்வொன்றும் ஒரு நாளைக்கு மூன்று சவாரிகள் செல்கின்றன.

இதையடுத்து அங்குள்ள மலைக்கிராமத்தில் 80 விழுக்காட்டு மக்கள் ஒட்டகச் சவாரி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கமும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அப்பகுதியில் அதிகமான கேளிக்கை நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.